பக்கம் எண் :

658திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



17. மாணிக்கம்விற்ற படலம்

[கலிநிலைத்துறை]
சுகந்த வார்பொழின் மதுரையெம் பிரான்றன துணைத்தாள்
உகந்த வாவறு கண்ணுவ முனிமுத லோதும்
அகந்த வாதபே ரன்பருக் கருமறைப் பொருளைப்
பகர்ந்த வாறிது மாணிக்கம் பகர்ந்தவா பகர்வாம்.

     (இ - ள்.) சுகந்தம் வார் பொழில் மதுரை எம்பிரான் - நறுமண
முடைய நெடிய சோலைகள் சூழ்ந்த மதுரைப்பதியில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானாகிய சோமசுந்தரக்கடவுள், தன துணைத்தாள் உகந்து அவா
அறு கண்ணுவ முனி முதல் ஓதும் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
பற்றி (யான் என தென்னும் இருவகைப்) பற்றும் நீங்கிய கண்ணுவர் முதலாகக் கூறப்படும், அகம் தவாத பேர் அன்பருக்கு - உள்ளத்தினீங்காத பெரிய
அன்பினையுடைய முனிவர்களுக்கு, அருமறைப் பொருளைப் பகர்ந்தவாறு
இது - அரிய வேதங்களின் பொருளைக் கூறிய திருவிளையாடல் இதுவாகும்;
மாணிக்கம் பகர்ந்தவா பகர்வாம் - (இனி அப்பெருமான்) மாணிக்கம் விற்ற
திருவிளையாடலைக் கூறுவாம் எ - று.

     சுகந்தம் - நன்மணம். தன : அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மை
யுருபு. உகந்து - விரும்பி; ஈண்டு விரும்பிப்பற்றி யென்னும்பொருட்டு;

"முதல்வன் பாதமே
பற்றாநின் றாரைப் பற்றா பாவமே"

என்னும் தமிழ்மறை சிந்திக்கற்பாலது. ஓதப்படும் அன்பருக்கு என்க. தவாத
என்னும் பெயரெச்சம் அன்பர் என்பதன் பகுதியைக்கொண்டு முடியும்.
பகர்தல் - விற்றல், கூறுதல். பகர்ந்தவா : ஈறு தொக்கது. (1)

அன்ன நாள்வயின் வீரபாண் டியற்கணங் கனைய
மின்ன னாருளைம் போகமும் விளைநில மனைய
பொன்ன னார்பெறு காளைய ரைங்கணைப் புத்தேள்
என்ன வீறினார் வான்பயிர்க் கெழுகளை யென்ன.

     (இ - ள்.) அன்ன நாள் வயின் - அக்காலத்திலே, வீரபாண்டியற்கு
அணங்கு அனைய மின்னனாருள் - வீரபாண்டியனுக்குத் தெய்வ மகள்
போலும் மகளிருள், ஐம்போகமும் விளை நிலம் அனைய பொன் அனார் -
பெறு காளையர் - பெற்ற புதல்வர்கள், வான் பயிர்க்கு எழு களை என்ன
- சிறந்த பயனைத் தரும் பயிருக்கு மாறாக வளர்கின்ற களைபோல,
ஐங்கணைப் புத்தேள் என்ன வீறினார் - ஐந்து பாணங்களை யுடைய
மதவேள் என்று கூறுமாறு வளர்ந்தனர் எ - று.

     மின் அனார் - மின்னை யொத்தவர்; பொன் அனார் - திருமகளை
யொத்தவர்; இரண்டும் கிழத்தியர் என்னும் பெயர் மாத்திரமாய் நின்றன.