தருமம் புரிவது அந்நாடு
-அறஞ்செய்யப் பெறுவது அப்பாண்டி நாடு எ-று.
வேந்தர்
கோல் கோடிச் செம்மை மாறினும் என்பது செய்யு ளாகலின்
இடையே நின்றது; கோல்கோடுதலாற் கோட்கள் நிலை திரிதலும், அதனால்
மழையின்மையும், அதனால் விளைவு குன்றலும், அதனால் வறுமைநோயும்
உண்டாமென்க.
"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை" |
என்று மணிமேகலையும்,
"கோணிலை திரிந்து நாழ குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" |
என்று சிந்தாமணியும்
கூறுதல் காண்க. பொய்ம்மை மாறிய பத்தி - நெக்கு
நெக்கு நினைந்துள்ளுருகும் பத்தி. "மெய்ம்மையா முழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப், பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனு நீரைப்பாய்ச்சி" என்பதும் சிந்திக்கற் பாலது. பொலிவாவது
திருநீறு, கண்டிகை, திருவைந்தெழுத்து என்பவற்றின் விளக்கமாம். ஆக
என்பது குறைந்து நின்றது. புரிவது அந்நாடு - புரிதற்கு இடனாயது அந்நாடு;
நாடு என்பது நாட்டிலுள்ளாரைக் குறிப்பது என்னலுமாம். சிவபத்தியும்,
சிவபுண்ணியமும் மலிந்த நாட்டின்கண் விளைவஃகுதல் முதலியன உளவாகா
என்பது தோன்ற எதிர்மறை யும்மை கொடுத்துக் கூறினாரென்னலுமாம்.
தம்மை மாறியும் : உம்மை எச்சமும் சிறப்புமாம். (59)
உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த
திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சலதி
சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்து மஃதே. |
(இ
- ள்.) உலகம் யாவையும் ஈன்றவள் - எல்லா வுலகங்களையும்
ஈன்றருளியவளும், உம்பருள் உயர்ந்த திலகநாயகி - சத்திகளுள் உயர்ந்த
திலகம் போல்வாளுமாகிய உமாதேவியும், பரஞ்சுடர் - பரஞ்சோதியாகிய
சிவபெருமானும், சேய் என மூன்று தலைவரான் - முருகக்கடவுளுமாகிய
மூன்று முதல்வர்களாலும், முறைசெய்த நாடு இஃது அன்றி - செங்கோல்
ஓச்சியநாடு இப்பாண்டி நாடேயன்றி, சலதி சுலவுபாரின் உண்டாகுமோ -
கடலாற் சூழப்பட்ட நிலவுல கின்கண் வேறுநாடும் உளதோ (இன்று);
துறக்கத்தும் அஃதே - விண்ணுலகத்து மங்ஙனமே (வேறு நாடு இன்று) எ-று.
உம்பர்
என்பது இங்கே சத்திகளை யுணர்த்திற்று. உமை தடா தகைப்
பிராட்டியாராகவும், பரஞ்சுடர் சோமசுந்தர பாண்டியராகவும், சேய்
|