பக்கம் எண் :

விருத்தகுமார பாலரான படலம்81



சிவபெருமானைத் தாயிலாப் பிள்ளை என்று கூறிய நயம் ஓர்க. குறிப்பு -
சிந்தனை; தியானம், ஆக்கிய - அமைத்தா லொத்த; வேய் போன்ற என்பது கருத்து. சேய்மை யில்லையாக என்பது ‘சேயிலர’ என்றாயிற்று. விடைமேல் மழவுரு நீத்துத்தெரிய வென்க. (32)

மழவுருநீத் தடலேற்றின் வருவார்தம் மிடத்தணங்கின்
                              மனுவை யோதிப்
பழகியபார்ப் பனமகளைப் பார்ப்பதியின் வடிவாக்கிப்
                                 லருங் கண்டு
தொழவிடைமே லேற்றிவிசும் பாறாக மலர்மாரி
                                  சுரர்க டூற்ற
அழகரெழுந் தருளினார் களிதூங்கி யதிசயித்தா
                                ரவனி மாக்கள்.

     (இ - ள்.) மழ உரு நீத்து அடல் ஏற்றின் வருவார் - குழவி
வடிவத்தை நீக்கி வெற்றி பொருந்திய இடபவூர்தியில் வருகின்றவராகிய,
அழகர் - சோமசுந்தரக் கடவுள், தம் இடத்து அணங்கின் மனுவை ஓதிப்
பழகிய பார்ப்பன மகளை - தமது இடப்பாகத்திலமர்த்தருளும் உமாதேவியின்
திருமந்திரத்தை உச்சரித்துக் கைவந்த கௌரி யம்மையை, பார்ப்பதியின்
வடிவு ஆக்கி - உமையின் சாரூபத்தை அளித்தருளி, பலரும் கண்டு தொழ
- யாவருங் கண்டு வணங்க, சுரர்கள் மலர்மாரி தூற்ற - தேவர்கள் மலர்
மழை பொழிய, விடைமேல் ஏற்றி - இடபவூர்தியில் ஏற்றிக்கொண்டு, விசும்பு
ஆறாக எழுந்தருளினார் - வான்வழியாக எழுந்தருளினார்; அவனி மாக்கள்
களிதூங்கி அதிசயித்தார் - புவியிலுள்ள மக்கள் களிப்பிலழுந்தி
வியப்புற்றார்கள்.

     அழகர் என்பதனை முன்னர்க்கூட்டி, வருவாராகிய அழகர் என்க.
பார்ப்பதியின் வடிவு - உமையின் சாரூபம். மகளை ஏறி எழுந்தருளினார்
என்க. (33)

                  ஆகச் செய்யுள் - 1460