I


கடவுள் வாழ்த்து11



"சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு
ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரியு மன்றே"

என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தங்களான் முறையே யுணர்க.
கொங்கயற்கண்’ என்புழி ஐகாரம் திரிந்தது. மலையத்துவச பாண்டியனது
வேள்வியின்கண்ணே இறைவி மூவாட்டைக் குழவியாகத்
தோன்றியருளினமையால் ‘பாண்டியன் மகள்போற் கோலங் கொண்ட’
என்றார். அங்கயற்கணம்மை - பெயர்; மீனாட்சியம்மை. போதுமென்னும்
உம்மை தொக்கது. பொழுது என்பது போது என மருவிற்று. அகத்துள்
வைத்தல் - சிந்தித்தல். (8)

              சபாபதி
உண்மையறி வானந்த வுருவாகி
     யெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்
தண்மையனல் வெம்மையெனத் தனையகலா
     திருந்துசரா சரங்க ளீன்ற
பெண்மையுரு வாகியதன் னானந்தக்
     கொடிமகிழச்சி பெருக யார்க்கும்
அண்மையதா யம்பலத்து ளாடியருள்
     பேரொளியை யகத்துள் வைப்பாம்.

     (இ - ள்.) உண்மை அறிவு ஆனந்த உருவாகி - சத்துசித்து
ஆனந்தமே திருவுருவாகக்கொண்டு, எவ்வுயிர்க்கும் உயிராய் - எல்லா
உயிர்களுக்கும் உயிராய், நிரின் தண்மை - நீரில் தட்பமும், அனல்
வெம்மை என - தீயில் வெப்பமும் பேல, தனை அகலாது இருந்து -
தன்னை நீங்காதிருந்து, சர அசரங்கள் ஈன்ற - திரிவனவும் நிற்பனவுமாகிய
பொருள்களைப் பெற்ற, பெண்மை உருவாகிய - பெண்மை வடிவாகிய தன்
ஆனந்தக்கொடி - சிவகாம வல்லியார், மகிழ்ச்சி பெருக - கண்டு களிகூர,
யார்க்கும் - அனைவருக்கும், அண்மையதாய் - அணித்தாய், அம்பலத்துள்
- பொற் சபையின்கண், ஆடியருள் - திருநடனம் செய்தருளும்,
பேரொளியை - பெரிய ஒளிப்பிழம்பாகிய சபாபதியை, அகத்துள் வைப்பாம்
- மனத்துள் வைத்துச் சிந்திப்பாம் எ - று.

     ‘நீரின் றண்மை அனல் வெம்மை’ என்பன இறைவி இறைவனோடு
தாதான்மியமாய் நிற்குந் தன்மையை உணர்த்த வந்த உவமைகள். தன்
ஆனந்தக் கொடி - சிவகாமவல்லி என்னும் பொருட்டு; தன் - சிவம்; அன்றி,
ஆனந்தக்கொடி என்பதனைப் பெயராக்கித் தனது ஆனந்தக்கொடி எனலும்
ஆம். இறைவி கண்டு மகிழ இறைவன் திருக்கூத்தியற்றுதலை,

"செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழந்துநிற்க
நெஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு
                              காண்பதென்னே"

என்னுந் தேவாரத் திருவிருத்தத்தாலும் அறிக. (9)