I


திருநகரச் சிறப்பு113



திக்கெ லாம்புகழ் மதுரையைச் சிவபுர மாக்கி
முக்க ணாயக னரசுசெய் முறையினுக் கேற்பத்
தக்க தோழனோ டளகைமா நகருறை தயக்கம்
ஒக்கு மந்நகர் வாணிக ருறையுள்சூழ் நியமம். *

     (இ - ள்.) அந்நகர் வாணிகர் - அந்த மதுரை மாநகரத்துள்ள
வாணிகர்களின், உறையுள் சூழ் நியமம் - இல்லங்கள் சூழ்ந்த கடை
வீதியின் விளக்கம், திக்கு எலாம் புகழ் - எல்லாத் திசையாராலும்
புகழப்படுகின்ற, மதுரையை - மதுரைமாநகரை, சிவபுரம் ஆக்கி - சிவ
புரமாகச் செய்து, முக்கண் நாயகன் - மூன்று கண்களையுடைய இறைவன்,
அரசு செய் முறையினுக்கு ஏற்ப - செங்கோ லோச்சிய முறைமைக்குப்
பொருந்த, தக்க தோழனோடு - தகுதியான நண்பனாகிய குபேரனோடு,
அளகைமாநகர் உறை தயயக்கம் ஒக்கும் - அளகை மாநகரமானது
தயங்கிய விளக்கத்தை ஒக்கும் எ - று.

     முக்கணாயகன் அரசு புரிதலின் மதுரை சிவபுரமாயிற்று. தக்க -
தோழனா யிருத்தற்குத் தக்க. உறையுள் - உறைவிடம்; உள் : பெயர்
விகுதி. (69) மன்னவர் வீதி

ஒற்றை யாழியா னுலகிரு ளொதுக்குமா போலச்
செற்ற நேமியாற் கலியிருள் தின்றுகோ லோச்சி
மற்ற டம்புய வலியினான் மாறடு சீற்றக்
கொள்ள மன்னவர் விழுக்குடிக் கோமறு குரைப்பாம்.

     (இ - ள்.) ஒற்றை ஆழியான் - ஓர் உருளை பூண்ட தேரினை யுடைய
சூரியன், உலகு இருள் ஒதுக்குமாபோல - உலகின்கண் புறவிருளை
நீக்குவதுபோல, செற்றம் நேமியால் - (தீயோரிடத்தில்) வெகுளியை யுடைய
ஆணைத் திகிரியால், கலி இருள் தின்று - (குடிகளின்) துன்ப மாகிய
இருளைக் கெடுத்து, கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, மல் தடம்புய
வலியினால் - வளவிய பெரிய தோள் வலிமையால், மாறு அடு சீற்றம் -
பகைவரைக் கொல்லுகின்ற செற்றத்தினையும், கொற்றம் - வெற்றியை
யுமுடைய, மன்னவர் விழுக்குடி - அரசர்களின் சீரிய குடிகளையுடைய,
கோ மறுகு உரைப்பாம் - அரச வீதியின் பெருமையைச் சொல்வாம்
எ - று.

     ஒன்று என்பது ஐகாரச்சாரியை பெற்று ஒற்றை யென்றாயது. ஆழி
அதனையுடைய தேருக்காயிற்று. ஒதுக்குமாறு என்பது ஈறு கெட்டது. செற்ற
நேமி - ஆக்கினா சக்கரம். மல் - வளன்; மற் போருமாம். மாறு - பகை;
பகைவரை யுணர்த்திற்று. (80)

தரங்க வேலைக டம்மையே தாளுறப் பிணித்துத்
துரங்க மாவெனத் தொகுத்தமந் துரைபல வருவி
இரங்கு மோரறி வுயிர்வரை யாவையும் பெயர்த்து
மரங்கொல் யானைபோற் பிணித்தகூ டம்பல மன்னோ.


     (பா - ம்) * நிகமம்.