I


திருநகரச் சிறப்பு115



பயிலும் இடமாகவுள்ளன, எண் இலாக் கூடம் - அளவிறந்த கூடங்கள்
எ-று.

     திகிரியைச் சுழற்றினாற்போல வென்றபத 'தொளைய கல்லை' என்னும்
பொருளுக்கு ஏற்பவும், செந்நிலத்திற் பாய்ந்து என்பது 'செந்தூள் அளையும்'
என்னும் உவமைக்கு ஏற்பவும் வருவிக்கப்பட்டன. பயில்வன வாகிய
கூடங்கள் உள்ளன என முடித்தலுமாம். (73)

         [அறுசீரடியாசிரிய விருத்தம்]
தேசவில் நீல மாடஞ் செம்மணிச் சென்னி மாடங்
காசறு கனக மாடஞ் சந்திர காந்த மாடம்
ஆசற விளங்கு மின்ன மாடநீண் மாலை கூடற்
பாசிழை மடந்தை பூண்ட பன்மணிக் கோவை யன்ன.

     (இ - ள்.) தேசு அவிர் - ஒளி விளங்குகின்ற, நீல மாடம் - நீல
மணியாலாகிய மாளிகையும், செம்மணி - சிவந்த மாணிக்கங்களாற்
கட்டப்பெற்ற, சென்னிமாடம் - முடியையுடைய மாளிகையும், காசு அறு
கனகமாடம் - குற்றமற்ற பொன்னா லியற்றப்பட்ட மாளிகை யும், சந்திர
காந்த மாடம் - சந்திரகாந்தக் கல்லாலமைக்கப்பெற்ற மாளிகையும் ஆகிய,
ஆசு அற விளங்கும் - குற்ற மின்றாக விளங்குகின்ற, இன்னமாடம்
நீள்மாலை - இந்த நீண்ட மாளிகை வரிசைகள், கூடல் - மதுரையாகிய,
பாசிழை மடந்தை பூண்ட - பசிய அணிகலன் களையுடைய மங்கை
யானவள் அணிந்த, பல் மணிக் கோவை அன்ன - பலவகை மணிகளைக்
கோத்த வடங்களை ஒத்திருந்தன எ - று.

     மாலை - வரிசை. பசுமை இழை, பாசிழை யென்றாயது. (74)

விரையகல் கதுப்பி னல்லார் வீங்கிளங் கொங்கை போழ்ந்த
வரையகன் மார்ப மன்றி வடுப்படார் தமக்கன் பில்லார்
உரையகன் மான வாற்றா லொழுகுவார் பலகை யொள்வாட்
கரையகல் விஞ்சை வீரர் கணம்பயில் காட்சித் தெங்கும்.

     (இ - ள்.) வரை அகல் - மலைபோ லகன்ற, மார்பம் - மார்பின்
கண், விரை அகல் - மணமிக்க, கதுப்பின் - கூந்தலையுடைய, நல்லார் -
மகளிரின், வீங்கு இளம் கொங்கை - பருத்த இளமையாகிய கொங்கைகள்,
போழ்ந்த (வடு) அன்றி - பிளந்ததனாலாகிய வடுவே யல்லாமல், வடுப்படார்
- வேறு படையினால் வழுப்படாதவர்களும், தமக்கு அன் பில்லார் -
தம்முயிரினிடத்து அன்பில்லாதவர்களும், உரை அகல் - புகழ் மிகுந்த,
மான ஆற்றால் ஒழுகுவார் - மான நெறியால் ஒழுகுகின்ற வர்களுமாகிய,
பலகை ஒள் வாள் விஞ்சை - கேடகத்தையும் ஒளி பொருந்திய வாளையும்
பற்றி வீசுகின்ற வித்தையில் வல்ல, கரை அகல் வீரர்கணம் - அளவிறந்த
வீரர்கள் கூட்டம், பயில் காட்சித்து எங்கும் - நெருங்கி யிருக்கிற
காட்சியையுடையது எல்லாவிடங்களும் எ - று.

     வரை அகல் மார்பம் - மூன்று வரிசைகளையுடைய அகன்ற மார்பு
எனலுமாம். கொங்கை போழ்ந்த மார்பிலன்றி ஏனையிடத்து வடுப்படார்
எனக் கூறலுமாம்; இதற்கு இனம் பற்றி முகமும் கொள்ளப் படும்; என்னை?