I


118திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இளம் தகர் - கொழுமையும் இளமையுமுடைய ஆட்டுக் கிடாய்களையும்,
போர் மூட்டி - போரிற் செலுத்தி, வேறு அவற்று ஊறு நோக்கார் -
அவற்றின் பிற துன்பங்களை நோக்காதவர்களாய், வெம்முனை நோக்கி
நிற்பார் - கொடியபோர் ஒன்றையே கண்டு நிற்பார் எ - று.

     உயிருறும் துன்பநோக்கி யொழியாமையால் 'தம்முயிர்க் கிரங்காராகி'
என்றார். ஈர்த்தல் - இழுத்தல். தெவ்முனை தெம்முனை யென்றாயது.
முனை - போரிடம். செய்யும்படி என்பது வருவிக்கப்பட்டது. மலர் -
செங்காந்தட்பூ. வேறு, அஃதன்றி என்னும் பொருளில் வந்த
இடைச்சொல்லுமாம்.

"கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற்
சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா
வேட்டவற்ற தூறுள்ளார் வெருளிமாந்தர் போர்க்கொவீஇக்
காட்டியார்க்குங் கௌவையுங் கடியுங்கௌவை கௌவையே"

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளோடு இதனை ஒப்பு நோக்குக. (79)

பெண்முத்த மனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வையை
வெண்முத்த மிழைத்த சிற்றில் சிதைபட வெகுண்டு நோக்கிக்
கண்முத்தஞ் சிதறச் சிந்துங் கதிர்முத்த மாலை தட்பத்
தெண்முத்தி னகைத்துச் செல்வச் சிறார்கடே ருருட்டு வார்கள்.

     (இ - ள்.) பெண் முத்தம் அனைய - பெண்களுள் முத்தினை ஒத்த,
பேதைச் சிறுமியர் - பேதைப் பருவத்தையுடைய சிறுமிகள், பெருநீர்
வையை வெண்முத்தம் - மிகுந்த நீரினையுடைய வையையாற்றின்
வெள்ளியய முத்துக்களால், இழைத்த சிற்றில் சிதைபட - கட்டிய சிறு
வீடுகள் சிதைய, வெகுண்டு நோக்கி - (அதனால் அவர்கள்) கோபித்துப்
பார்த்து, கண் முத்தம் சிதற - கண்கள் முத்துப்போலும் நீர்த்துளிகளைத்
துளிக்க, சிந்தும் - அறுத்துச் சிந்திய, கதிர் முத்தமாலை - ஒளி பொருந்திய
முத்துமாலைகள், தட்ப - (தங்கள் சிறு தேர்ச் செலவைத்) தடைசெய்ய,
செல்வச் சிறார்கள் - செல்வத்தையுடைய அரசிளங் குமரர்கள், தெண்
முத்தின் நகைத்து - (அது கண்டு) தெள்ளிய முத்துப்போற் புன்னகை
யரும்பி, தேர் உருட்டுவார்கள் - சிறு தேரைச் செலுத்துவார்கள் எ - று.

     களங்க மின்மையுயம் அழகும் பற்றிப் 'பெண் முத்த மனைய' என்றார்.
வையை மருங்கே என்னலுமாம். சிதைபட உருட்டுவார்கள் என்றும், மாலை
தட்ப நகைத்து உருட்டுவார்கள் என்றும் தனித்தனி முடிக்க. சிதைபட
என்னும் எச்சம் காரியமும் காரணமும் ஆயிற்று. சிதற என்பது சிந்தும்
என்பதை விசேடித்து வந்தது. தட் - தடுக்க; தள் : பகுதி; தளையுமாம்.
'கண்முத்தம்' என்புழி, முத்தம் : ஆகுபெயர். சிறார் - ஆகாரமாயிற்று;
பராரை என்பதிற்போல. சிற்றில் சிதைத்தல் சிறாரின் குறும்புகளிலொன்று.
சிற்றில் சிதைத்தல், சிறுதேருருட்டல் என்பன சிறுபருவச் செயல்களாகப்
பிள்ளைக்கவியிற் பின்னுள்ளோர் பாடுதலுங் காண்க. (80)