I


12திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



           சோமசுந்தரர்
சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங்
     கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
     மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு
     மகனாகி மீன நோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட
     சுந்தரனை வணக்கஞ் செய்வாம்.

     (இ - ள்.) சடை மறைத்து - சடையை மறையச் செய்து, கதிர்
மகுடம் - ஒளிபொருந்திய திருமுடியை, தரித்து - சூடி, நறுகொன்றை
அம்தார் - மணமிகுந்த கொன்றை மலர்களாலாகிய அழகிய மாலையை
தணந்து - நீக்கி, வேப்பம் தொடை முடித்து - வேப்பம் பூக்களாலாகிய
மாலையை அணிந்து, விடநாகக் கலன்அகற்றி - நஞ்சையுடைய
நாகங்களாகிய அணிகளை அகற்றி, மாணிக்கம் சுடர் பூண் ஏந்தி -
நவமணிகளாலாகிய ஒளியையுடைய அணிகளை அணிந்து, விடை நிறுத்தி -
இடபக்கொடியை உயர்த்தாது நிறுத்தி, கயல் எடுத்து - மீனக்கொடியை
உயர்த்தி, மீனம் நோக்கின் - மீன்போலும் கண்களை யுடைய, மடவரலை -
தடாதகைபிராட்டியாரை, மணந்து - திருமணம் செய்ததனால், வழுதி
மருமகனாகி - மலையத்துவச பாண்டியனின் மருமகனாகி, உலகம் முழுது -
எல்லா உலகங்களையும், ஆண்ட - ஆண்டருளிய, சுந்தரனை வணக்கம்
செய்வாம் - சோமசுந்தரக் கவுளை வணங்குவாம் எ - று.

     இறைவன் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ ஆகலின் அருள்
காரணத்தாற் பாண்டி வேந்தாதற்கேற்பக் தனதுண்மைத் திருக்கோலத்தையே
மாற்றி வந்தனனென்பார் ‘சடைமறைத்துக் கதிர்மகுடங் தரித்து’ என்றிங்ஙனங்
கூறினர்.

"கடுக்கை மலர்மாற்றி வேப்பமலர் சூடி
ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து
விரிசடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து
                         வழுதியாகி"

என்னும் கல்லாடத்துடன் இப்பாட்டு ஒற்றுமையுற்று விளங்குதல் காண்க.

     முழுதென்பது எஞ்சாமைப் பொருட்டு. வணக்கஞ் செய்வாம் என்னும்
இருசொல்லும் ஒரு சொன்னீரவாய்ச் சுந்தரனை என்னும் இரண்டாவதற்கு
முடிபாயின. (10)