I


124திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) தெய்வ நீறும் - தெய்வத் தன்மையையுடைய திருநீறும்
ஐந்து எழுத்துமே - திருவைந் தெழுத்துமே, சிதைக்கலன் ஆக - பாய்
மரத்தினை யுடைய கப்பலாகக் (கொண்டு) எவ்வம் மாசு இருவினை -
துன்பத்தைத் தருகின்ற குற்றத்தையுடைய இருவினைகளாலும், உடம்பு
எடுத்து உழல் பிறவி - உடம்பினை எடுத்து வருந்துகின்ற எழு வகைப்
பிறப்பாகிய, பௌவம் ஏழையும் - ஏழு கடல்களையும், கடந்து - நீந்தி,
அரன் பதமலர்க் கரைசேர் - இறைவன் திருவடித் தாமரையாகிய கரையை
அடைகின்ற, சைவமாதவர் உறைமடம் - தவத்தினையுடைய சைவப்
பெரியார்கள் உறைகின்ற மடங்களையுடைய, தனிமறுகு உரைப்பாம் -
ஒப்பற்ற வீதியின் பெருமையைச் சொல்வாம் எ - று.

     திருநீறு தெய்வத்தன்மை யுடையதாதலைத் திருநீற்றுப் பதிகத்தானறிக.
திருவைந்தெழுத்தும் புணையாகப் பிறவிக்கடல் கடத்தலை,

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
     தடந்திரையா லெற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற்
     கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி
     யஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதலந்த மில்லா மல்லற்
     கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே"

என்னும் திருவாசகத்தானு மறிக. சிதை - பாய்மரம். மாசு -
அவிச்சையுமாம்; 'இருள்சே ரிருவினையும்' என்றார் பொய்யில்புலவரும்.
சைவ மாதவர் - சிவனடியார்; ஆதி சைவருமாம். (88)

எங்கு மீசனைப் பூசைசெய் திகபர மடைவார்
எங்கு மன்பரைப் பூசைசெய் தெழுபிறப் பறுப்பார்
எங்கு மாமகஞ் செவிமடுத் தெதிர்வினை தடுப்பார்
எங்கு நாயகன் வடிவுணர்ந் திருள்மலங் களைவார்.

     (இ - ள்.) (அவ்வீதியில்) எங்கும் - எவ்விடத்தும், ஈசனை -
சிவபெருமானை, பூசைசெய்து இகபரம் அடைவார் - பூசனை புரிந்து இம்மை
மறுமைப் பயன்களைப் பெறுவாரும், எங்கும் - யாண்டும், அன்பரைப்
பூசைசெய்து - அடியார்களைப் பூசித்து, எழுபிறப்பு அறுப்பார் - வருகின்ற
பிறவியைப் போக்குவாரும், எங்கும் - எப்புறத்தும், ஆகமம் செவிமடுத்து -
ஆகம நூலைக் கேட்டு, எதிர்வினை தடுப்பார் - ஆகாமிய வினையைத்
தடுப்பாரும், எங்கும் - எப்பக்கமும், நாயகன் வடிவு உணர்ந்து -
இறைவனது திருவுருவைச் சிந்தித்து, இருள்மலம் களைவார் -
ஆணவமலத்தைக் கெடுப்பாரும் (உளர்) எ - று.

     இகபரம் என்பன அவற்றின் பயனுக்கு ஆகுபெயர்; பரம் என்றது
ஈண்டு மறுமையை. அன்பரைப் பூசித்தலாவது அவரை யடைந்து அவர்
கருமத்தைத் தன் கருமமாகச் செய்து கூசிமொழிந்து அருள் ஞானக்
குறியினின்று வழிபடுதலாகும்; அன்பர் திருவேடத்தை அரனெனவே தேறி
வழிபடுதலுங் கொள்க, எழுபிறப்பு - எழுவகைப் பிறப்புமாம். செவிமடுத்தல்,
சிந்தித்தல் தெளிதல் கட்கும் உபலக்கணம். எதிர்வினை - ஆகாமியம்;
எதிரக்கடவதாகிய சஞ்சிதம் எனினும் ஆம்.