I


திருநகரச் சிறப்பு127



விழவின் செல்வமுஞ் சுருதியுந் திசையெலாம் விழுங்கும்
முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்.

     (இ - ள்.) குழலும் - வேய்ங்குழலின் ஒலியும், தும்புரு நாரதர்
பாடலும் - தும்புரு நாரதர் என்னு மிருவர்களின் இசைப்பாட்டின் ஒலியும்,
கொம்பு அனார் குனித்துச் சுழலும் ஆடலும் - பூங்கொம்பை யொத்த
மகளிர் வளைந்து சுழன்று ஆடுகின்ற ஆடலின் ஒலியும், மூவர்வாய்த்
துதியும்- ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசுகள் ஆளுடைய
நம்பிகள் ஆகிய மூவரும் திருவாய்மலர்ந்தருளிய திருநெறித் தமிழ்மறையின்
ஒலியும், விழவின் செல்வமும் - சிறந்த திருவிழாவின் ஒலியும், சுருதியும் -
நான் மறைகளின் ஒலியும், திசை எலாம் விழுங்கும் முழவும் - திக்குகளின்
ஒலிகளையெல்லாம் கீழ்ப்படுத்தும் முழவின் ஒலியும், கண்துயிலாதது -
நீங்கப்பெறாதது, முன்னவன் கோயில் - இறைவன் வீற்றிருந்தருளுந்
திருக்கோயில் ஆகும் எ - று.

     தும்புரு - கந்தருவ குரு. நாதரர் பிரமனின் மானச மைந்தர்; இவர்
தேவ விருடியெனவும் படுவர். இவ்விருவரும் இசையில் மிக வல்லுநராவர்.
நாரதர் சிவபிரான் றிருமுன் இசைபாடுதற் சிறப்பை,

"நெற்றித் தனிக்க ணெருப்பைக் குளிர்விக்குங்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன்"

எனப் புகழேந்தியாரும்,

"மான்புரிந்த திருக்கரத்து மதிபுரிந்த நதிவேணி மங்கை பாகன்
தான்புரிந்த திருக்கூத்துக் கிசைய மகிழ்ந் திசைபாடுந் தத்வஞானி"

என வில்லிபுத்தூரரும் பாடியிருத்தல் காண்க. குனித்தல் - வளைதல்;
குனித்த புருவமும்' என்பது காண்க. செல்வம் - ஈண்டு ஒலியின் பெருக்கம்.
திசையெலாம் விழுங்கும் என்பதற்குத் திக்குக்களையெல்லாம் அகப்படுத்தும்
என்றுரைத்தலுமாம். துயிலாமை - இடையறாது நிற்றல் : துயிலாதது.
இடப்பொருளில் வந்த வினைப்பெயர். (92)

மடங்க லின்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று
விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண்பிறைக் கண்ணியான் கயிலைமூ வுலகும்
ஒடுங்கு கின்றநா ளொங்கிய வோக்கமே யொக்கும்.

     (இ - ள்.) வெள் ஏற்று விடங்கர் - வெண்மையான ஏறாகிய ஊர்
தியையுடைய அழகராகிய இறைவன் திருநிருத்தஞ் செய்கின்ற, வெள்ளி
மன்று, வெள்ளியம்பலத்தினின்று, இமைத்து - விளங்கி, மடங்கல் இன்றி -
மடங்குதலில்லாமல், விண் பிளந்து - வானத்தைக் கிழித்து, மேல் வளர்ந்து
எழு - மேலே வளர்ந்தெழுகின்ற, வெண்சுடர் நீட்டம் - வெள்ளிய ஒளியின்
நீட்சியானது, முடங்கல் - வளைவையுடைய, வெண்பிறைக் கண்ணியான்
கயிலை - வெண்மையுடைய பிறையாகிய கண்ணியையுடைய சிவபிரான்
வீற்றிருக்கும் கயிலைமலையானது, மூவுலகும் ஒடுங்குகின்ற நாள் - மூன்று
உலகங்களும் அழிகின்ற நாளில், ஓங்கிய ஓக்கமே ஓக்கும் - வளர்ந்த
உயர்ச்சியையே போலும் எ - று.