I


கடவுள் வாழ்த்து13



       தடாதகைப்பிராட்டியார்
செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று
     முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
     நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
     தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
     யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்.

     (இ - ள்.) செழியர் பிரான் - பாண்டியர் தலைவனாகிய மலையத்
துவசனின், திருமகளாய் - திருமகளாய்த் தோன்றி, கலைபயின்று எல்லாக்
கலைகளையும் கற்று, முடிபுனைந்து - திருமுடி சூடி, செங்கோல் ஒச்சி -
அரசு நடாத்தி, முழுது உலகும் - எல்லா உலகங்களையும், சயங்கொண்டு -
வெற்றி கொண்டு, திறைகொண்டு - திறைப் பெருளை ஏற்று, நந்தி கணம் -
நந்திதேவர் முதலிய சிவகணங்களை, முனைப்போர் - போர்முனையில்.
சாய்த்து - வலிகெடச் செய்து, தொழு கணவற்கு - (தன்னாலும்
அனைவராலும்) தொழப்பெறுகின்ற நாயகனுக்கு, அணிமண மாலிகை சூட்டி
- அழகிய மணமாலையைச் சூட்டி, தன்மகுடம் சூட்டி - தனது
திருமுடியையும் புனைவித்து, செல்வம் தழைவுறு - செல்வம் நிரம்பப்பெற்ற,
தன் அரசு அளித்த - தனது அரசியலையும் கொடுத்தருளிய, பெண்ணரசி -
மங்கையர்க்கரசியாகிய தடாதகைப்பிராட்டியாரின், அடிக்கமலம் - திருவடித்
தாமரைகளை தலைமேல் வைப்பாம் - முடியின்மீது சூடுவாம் எ - று.

     இறைவி பாண்டியற்கு மகளாய்த் தோன்றிப் புரிந்தருளிய செய
லெல்லாம முறையானே இப்பாட்டில் தொகுத்துரைக்கப்பட்டவாறறிக.
நந்திகணம் - நந்தியை முதலாகவுடைய கணம். முனைப்போர் என்பதைப்
போர்முனை என மாற்றுக. சாய்தல் - மெலிதல்; சாய்த்தல் அதன் பிறவினை.
தொழு கணவன் - தொழப்படுங் கணவன். மேற் பாட்டினும் இப்பாட்டினும்
கூறிய வரலாற்றைத் தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப்படலத்தானும்,
திருமணப்படலத்தானும் அறிக. (11)

      வெள்ளியம்பலவாணர்
பொருமாறிற் கிளர்தடந்தோ ளொருமாறன்
     மனங்கிடந்த புழுக்க மாற
வருமாறிற் கண்ணருவி மாறாது
     களிப்படைய மண்ணும் விண்ணும்
உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத்
     தடுமாறி யுழலு மாக்கள்
கருமாறிக் கதியடையக் கான்மாறி
     நடித்தவரைக் கருத்துள் வைப்பாம்.