I


132திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வென்றதும் - மகா மேருவைச் செண்டாலடித்து வெற்றி பெற்றதும், இந்நகர்
வலியினால் அன்றோ - இந்நகரத்தின் வலிமையினால் அல்லவா எ - று.

     இங்கே மீனவர் என்றது உக்கிரகுமாரபாண்டியரை; அவர் கடல் சுவற
வேல் விட்டதும், இந்திரன் முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத்
தளையிட்டதும், மேருவைச் செண்டாலடித்ததும் இப்புராணத்துள்ளே வரும்
அவ்வப்படலங்களானறிக. 'ஆற்று பவர்க்கும் அரண் பொருள்' என்றபடி
வலியுடையார்க்கும் அரண் வேண்டுமாகலின், ஈண்டு அதனையே மிகுத்துக்
கூறுவாராய் 'இந்நகர் வலியினாலன்றோ' என்றார். (101)

எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்குந்
தங்கு பேரொளி யல்லதித் தனிநகர்ச் செல்வஞ்
செங்க ணாயிர நாவினான் செப்பவு மெதிர்கண்
டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ.

     (இ - ள்.) எங்கும் நாவும் ஆய் - எவ்விடத்தும் நாவையுடையதாகி,
எங்கணும்கண்ணும் ஆய் - எங்குங் கண்ணையுடையதாகி, எங்கும்தங்கு -
யாண்டும் நிறைந்த, பேர் ஒளி அல்லது - பெரிய ஒளிப் பிழம்பாகிய
இறைவனால் அளக்கவும் கூறவு முடியுமே யன்றி, இத் தனி நகர்ச் செல்வம்
- இந்த ஒப்பற்ற நகரிலுள்ள செல்வமானது, செங்கண் ஆயிரம் நாவினான்
செப்பவும் - சிவந்த கண்களையும் ஆயிரம் நாவையுமுடைய ஆதிசேடன்
சொல்லவும், அம் கண் ஆயிரம் உடையவன் - அழகிய ஆயிரம்
கண்களையுடைய இந்திரன், எதிர்கண்டு அளக்கவும் படுமோ - எதிரே
பார்த்து அளந்துவிடவும் முடியுமோ (முடியாது) எ - று.

     எண்ணில்லாத நாவும் கண்ணுமுடையவராலன்றி, ஆயிர மென்னும்
வரையறைப்பட்ட நாவும் கண்ணுமுடையவரால் சொல்லவும் அளக்கவும்
முடியாதென்றார். எவ்விடத்தும் எல்லாத்தொழிலும் ஒருங்கே செய்யும்
இறைவனது முடிவிலாற்றலைக் குறித்தற்கு 'எங்கு நாவுமா யெங்கணுங்
கண்ணுமாய்' என்றார்.

"ஆயிரந் தாமரை போலு மாயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்த வம்மானே"

என்பது முதலிய திருவாக்குகளில் ஆயிரம் என்பது அளவிறந்த தென்னும்
பொருட்டு. (102)

புண்ணி யம்புரி பூமிபா* ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்.


     (பா - ம்.) * பூமியார்.