I


134திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) கலவி வித்தாக ஊடி - புணர்ச்சி காரணமாகப் புலந்து,
கண்புனல் குளிக்கும் நல்லார் - கண்ணீரில் மூழ்கும் மகளிரின், புலவி தீர்
செவ்வி நோக்கி - புலவி நீங்குகின்ற காலத்தை யறிந்து, புணர் முலைப்
போகம் துய்த்தும் - நெருங்கிய கொங்கைகளின் இன்பத்தை நுகர்ந்தும்,
நிலை நிலையாமை நோக்கி - நிலையுடைப் பொருள் நிலையில் பொருளி
னியல்பை அறிந்து, நெறிப்படு - முறைமையையுடைய, தரும தானம் - தரும
தானங்களை கலைஞர் கைப்பெய்தும் -நூலறிவு மிக்க சான்றோருக்குச்
செய்தும், காலம் கழிப்பவர் எண் இலாதார் - காலத்தை நடத்துகின்றவர்கள்
பலர் (அப்பதியில் உளர்) எ - று.

"ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்"

என்பவாகலின் 'கலவி வித்தாக வூடி' என்றார். நிலையுள்ளனவும்
நிலையில்லனவும் நிலைநிலையாமை எனப்பட்டன; உம்மை தொக்கது. நித்த
அநித்தங்களை உணர்ந்த வழியே அறஞ் செய்தற்கண் மனவெழுச்சி
யுண்டாமென்பார் 'நோக்கி' என்றார். தருமம பொதுவும் தானம் சிறப்புமாம்.
நெறி யென்றது அறநூல் கூறு முறைமையினை. (105)

சந்தித்து மீன நோக்கி தலைவனை மூன்று போதும்
வந்தித்து மீசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்
அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ்
சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பர் பல்லோர்.

     (இ - ள்.) மீன நோக்கி தலைவனை - அங்கயற்கண்ணி
தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளை, மூன்று போதும் சந்தித்து வந்தித்தும்
- மூன்று காலங்களிலும் சென்று கண்டு வணங்கியும், ஈசன் பூசை மரபுளி
முடித்தும் - சிவபூசையை ஆகம முறையால் நிறைவேற்றியும், வேதம்
அந்தித்தும் அறியான் செய்த - வேதங்கள் அணுகியும் அறியமுடியாத
வனாகிய அவ்விறைவன் செய்தருளிய, திருவிளையாடல் கேட்டும் -
திருவிளையாடல்களைப் பெரியோர் சொல்லக் கேட்டும், சிந்தித்தும்
(அவற்றை) நினைத்தும், அன்பர் பூசை செய்தும் - அடியார்களைப் பூசித்தும்,
நாள் கழிப்பர் பல்லோர் - நாளை நடத்துவார்கள் பலர் (அப்பதியில்)
எ - று.

     சந்தித்து வந்தித்து மென்க. போதும் - மரூஉ. மூன்று பொழுது :
காலை. நண்பகல், மாலை என்பன. மரபுளி - முறையால் : உளி : மூன்றன்
பொருள்படுவ தோரிடைச் சொல். அந்தித்தல் - சந்தித்தல், அணுகல் :
முடியச் செல்லுதல் எனினுமாம். அறியான் - அறியப் படாதவன்;
செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது. சிந்தித்தும் என்பதற்கு
இறைவனைத் தியானித்தும் என்றுரைத்தலுமாம். (106)

கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்பவை* கருத்து ளூறச்
சொற்பொரு ணினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுட்
                              டுளங்கந் தீர்த்தும்
எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த
அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்துநாள் கழிப்பர் சில்லோர்.


     (பா - ம்.) * கேட்பவை.