I


திருக்கைலாயச் சிறப்பு137



                 

             திருக்கைலாயச் சிறப்பு  

                [கலிலித்துறை]

வரங்க டத்ரு ளெனமுது வானவர முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவ னிருப்பது திருக்கயி லாயம்.

     (இ - ள்.) முதுவானவர் முனிவோர் - பெரிய தேவர்களும்
முனிவர்களும், வரங்கள் தந்தருள் என - வரங்களைக் கொடுத்தருள
வேண்டுமென்று, கரங்கள் தம் தலை முகிழ்த்திட - கைகளைத் தங்கள்
தலையிற் கூப்பி வேண்டாநிற்க, கருணை செய்து - (அவருக்குத்) திருவருள்
செய்து, அவிச்சை உரம் கடந்து - (இயல்பாகவே) வலிய பாசங்களினின்று
நீங்கி, உரை உணர்வு எலாம் கடந்து - வாக்கு மனங்கள் எல்லாவற்றையுங்
கடந்து, அருமறையின் சிரம் கடந்தவன் - அரிய வேதங்களின் முடிவையும்
கடந்த இறைவன், இருப்பது திருக்கைலாயம் - வீற்றிருக்கப்பெறுவது
திருக்கைலாயமலை ஆகும் எ - று.

     முதுவானவர் - திருமால் முதலியோர். முனிவோர் : அகரம்
ஓகாரமாதல் உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. அவிச்சை - அஞ்ஞானம்;
அஃது ஏனைத் தேவர் முதலாயினார் அறிவை யெல்லாம் மறைக்கும்
வலியுடையதென்பது தோன்ற, 'அவிச்சையுரம்' என்றார். உரை உணர்வுகள்
பல திறப்படுமாகலின் 'எல்லாம்' என்றார். இறைவன் அபரஞானத்திற்கு
அப்பாற்பட்டவ னென்பார் 'அருமறையின் சிரங்கடந்தவன்' என்றார். செய்து,
கடந்து, கடந்து என்னும் வினை யெச்சங்கள் கடந்தவன் என்பதன்
பகுதியைக் கொண்டு முடிந்தன. (1)

புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.

     (இ - ள்.) புரந்த ஆதி வானவர் பதம் - இந்திரன் முதலிய
இமையவர் உலகும், போது உறை புத்தேள் - தாமரை மலரில் உறையும்
அயனுடைய, பரந்த வான்பதம் - அகன்ற உயர்ந்த சத்தியலோகமும்,
சக்கரப்படை உடைப்பகவன் - திகிரிப்படையினையுடைய திருமாலின், வரம்
தவாது வாழ் பதம் - மேன்மை கெடாது வாழ்கின்ற பரம பதமும், எலாம் -
ஆகிய எல்லாமும், நிலைகெட வரும் ஊழி நாள் தோறும் - அழிய
வருகின்ற ஊழிக்காலந்தோறும், அ ஓங்கல் - அத்திருக்கைலாய மலை
யானது, உரம் தவாது நின்று ஓங்கும் - வலி கெடாது நிலைபெற்று வளரும்
எ - று.

     புரந்தராதி : வடமொழித் தீர்க்க சந்தி. பகவன் ஆறு குணங்களை
யுடையவன்; சிவன், திருமால் முதலிய பல கடவுளர்க்கும் இப்பெயர்
உரித்து. வரும் ஊழி நாள் எனச் சொற்கள் மாற்றப்பட்டன; வரு