I


138திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நாள் நின்று அவ்வூழிதோறும் என வுரைத்தலுமாம்; உம்மை தொக்கது.
'கைலை மூவுலகும் ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கம்' என முன்னுங்
கூறினார்; ஆண்டுக் காட்டிய 'ஊழிதோ றூழி முற்று முயர்பொன்
னொடித்தான் மலைய' என்பதனை ஈண்டுங் கொள்க. ஓங்கல் என்பது
மலைக்குத் தொழிலாகுபெயர்; அல் : பெயர் விகுதி யென்னலுமாம். (2)

அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
நரம்பி னாசையு முழவதிர் சும்மையும் நால்வாய்
வரம்பி லாதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ.

     (இ - ள்.) அரம்பை மாதரார் ஆடலின் அரவமும் - தேவ
மகளிரின் கூத்தின் ஒலியும், பாடல் நரம்பின் ஓசையும் - பாடலின் ஒலியும்
யாழின் ஒலியும், முழவு அதிர் சும்மையும் - மத்தளம் அதிர்கின்ற ஒலியும்,
நால்வாய் வரம்பு இல் ஓதையும் - யானைகளின் அளவிறந்த ஒலியும்,
அருவி வீழ் ஒலியும் - அருவிகள் வீழ்கின்ற ஒலியும், மாறாது - நீங்காது.
வானமும் திசைகளும் நிரம்பி நிமிர்வன - வானுலகத்தும் திக்குகளிலும்
சென்று நிரம்பி மிகுவன எ - று.

     ஓசை யென்பதனைப் பாடலோடுங் கூட்டுக. நரம்பு : ஆகுபெயர்.
நால்வாய் : தொங்கும் வாயையுடையது என அன்மொழித்தொகைக்
காரணப்பெயர். மாது, ஓ : அசை. அரவம் முதலியன சொல் வேறு பட்டு
ஒரேபொருளில் வருதலின் இது பொருட் பின்வருநிலை. (3)

வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத்
தந்த தாலரன் கயிலையுந் தனதுசா ரூபம்.

     (இ - ள்.) அரன் கயிலையும் - (சிவபிரானே யன்றி) அவன்
வீற்றிருக்கும் கயிலாய மலையும், வெந்த நீற்று ஒளி வெண்மையும் -
வெந்த திருநீற்றின் ஒளிபோலும் வெண்மையையும், விமலனை அகம்
கொண்டு - நின்மலனாகிய இறைவனைத் தன்னிடத்தே கொண்டு, அத்தம்
இன்றியே அசைவற இருக்கையும் - அழிவில்லாமல் அசைவற்று
இருத்தலையும், அருவிவந்த கண்களும் கொண்டு - அருவி வருகின்ற
இடங்களையுங் கொண்டு, அவண் இருக்கும் மாதவர்க்கு - அங்கு
இருக்கின்ற பெருமை பொருந்திய முனிவர்களுக்கு, தனது சாரூபம் தந்தது -
தனது சாருப பதவியைக் கொடுத்தது எ - று.

     சாரூபம் - பதமுத்தி மூன்றனு ளொன்று. சிவசாரூபமாவது முக்கண்,
சடைமுடி, நாற்றோள், மணிமிடறு, மான் மழு வேந்துகை முதலியனவுடைய
சிவனது திருவுருவைப் பெறுதல். வெண்மை, இருக்கை, கண்கள் என்பன
கைலைக்கும் மாதவர்க்கும் பொதுவாக வுள்ளன வாதலின் கைலையும்
தனது சாரூபம் தந்ததென்றார்; இது தற்குறிப்பேற்றவகை. திருநீற்றின் ஒளி,
உளத்திற் கொண்டு சலிப்பின்றி யிருத்தல். ஆனந்தவருவி வந்த விழிகள்
என மாதவர்க் கேற்பப் பொருளுரைத்துக் கொள்க. ஆல் : அசை.
கயிலையும் என்னும் உம்மை எச்சப்பொருட்டு. (4)