I


தலவிசேடப் படலம்163



     (இ - ள்.) மற்றைய தலத்தில் - பிற பதிகளில், மதியம்தோறும் -
மாதந்தோறும், சாந்திராயணம் உற்ற பேறு - சாந்திராயண விரதம்
நோற்றலால் வரும் பயன், இங்கு கங்குல் உண்டியால் அடை பேறு ஆகும்
- இப்பதியில் இரவில் உண்ணுதலால் அடைகின்ற பயன் ஆகும்; மற்றைய
தலத்தில் - ஏனைய தலங்களில், மாதப்பட்டினி பலத்தின் பேறு மாதப்
பட்டினி விரதத்தால் வரும் பயன், இங்கு உற்று ஒரு வைகல் உண்டி
ஒழிந்தவர் - இத்தலத்திலிருந்து ஒருநாள் உணவு நீஙகியவர், பெறும்பேறு
ஆகும் - அடைகின்ற பயன் ஆகும் எ - று.

     மற்றையவாகிய தலங்களென்க. சாந்திராயணமாவது, சந்திரன் கலை
வளருந்தோறும் ஒவ்வொரு கவளம் உயர்ந்தும், குறையுந் தோறும் ஒவ்வொரு
கவளம் குறைத்தும் உணவுண்டு நோற்கும் விரதம். மதியம் அம் சாரியை;
அசையும் என்ப. கங்குலுண்டி - கங்குலில் மாத்திரம் உணவு கொள்ளும்
நோன்பு. பட்டினி - உபவாசம். பலம் என்றது ஈண்டு விரதமென்னும்
பொருளது. ஒருநாள் எபவாச நோன்புற்றோர் அடையும் பயன் ஆகும். (13)

அயனக ரடைந்து நான்கு திங்கணோன் பாற்றும் பேறிவ்
வியனக ரடைந்து நோற்கு மட்டமி விரத நல்கும்
அயனக ரெய்தி யாறு திங்கணோன் பாற்றும் பேறிவ்
வியனகர்ச் சோம வார விரதமே யளிக்கு மன்றே.

     (இ - ள்.) அயல் நகர் அடைந்து - வேறு பதிகளிற் சென்று, நான்கு
திங்கள் - நான்கு மாதங்கள், நோன்பு ஆற்றும் பேறு - விரதங்
கொள்ளுதலினால் வரும் பயன், இவ்வியன் நகர் அடைந்து - இந்த உயர்ந்த
பதியைச் சார்ந்திருந்து, நோற்கும் அட்டமி விரதம் நல்கும் - புரிகின்ற
அட்டமி விரதம் கொடுக்கும்; அயல் நகர் எய்தி - பிற தலங்களிற்போய்,
ஆறு திங்கள் - ஆறு மாதங்கள், நோன்பு ஆற்றும் பேறு - விரதம்
இயற்றுதலினால் வரும் பயனை, இவ்வியன் நகர் - இச் சிறந்த பதியிலிருந்து
நோற்கின்ற, சோமவார விரதமே அளிக்கும் - சோமவார விரதம் ஒன்றுமே
நல்கும் எ - று.

     அன்று, ஏ : அசை. (14)

ஏனைய தலத்தி லோராண் டுணவொழிந் தியற்று நோன்பால்
ஆனபே றிங்கு நோற்குஞ் சிவனிரா வளிக்கு மிங்கே
ஊனவைம் பொறியும் வென்றோன் முப்பொழு துண்டு வைகித்
தானமர்ந் தாலுங் காலுண் டியற்றுமா தவத்தோ னாகும்.

     (இ - ள்.) ஏனைய தலத்தில் - பிற பதிகளில், ஓர் ஆண்டு - ஒரு
வருடம், உணவு ஒழிந்து - உணவின்றி, இயற்றும் நோன்பால் ஆன பேறு -
செய்கின்ற விரதத்தால் வரும்பயனை, இங்கு நோற்கும் சிவன் இரா
அளிக்கும் - இப்பதியிற் புரிகின்ற சிவராத்திரி விரதம் ஒன்றுமே நல்கும்;
இங்கு - இப்பதியில், ஊன் ஐம்பொறியும் வென்றோன் - குற்றமுள்ள
ஐம்பொறிகளையும் வென்றவன், முப்பொழுது உண்டு வைகி அமர்ந்தாலும் -
மூன்று வேளையும் உண்டு இருந்தானாயினும், கால் உண்டு இயற்று
மாதவத்தோன் ஆகும் - காற்றை உண்டு நோற்கின்ற பெரிய தவத்தை
யுடையோனாகும் எ - று.