I


164திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



முப்பொழுதும் என்னும் உம்மை தொக்கது. தான் : அசை. காற்றினை
யுண்டு தவம்புரிதலை,

"புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
யுண்டியா யண்ட வாணரும் பிறரும்
வற்றி யாருநின் மலரடி காணா
மன்ன வென்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய்"

என்னும் திருவாசகத்தா னறிக. (15)

இந்தநான் மாட மோங்கு மாலவா யிடத்தியா ரேனும்
அந்தணர் தமக்கோர் முட்டி யருந்தவர் தமக்கோர் பிச்சை
தந்தவர் புறம்பு செய்த சோடச தானந் தம்மால்
வந்தபே றடைவர் பல்வே றுரைப்பதென் மதியான் மிக்கீர்.

     (இ - ள்.) மதியால் மிக்கீர் - அறிவால் உயர்ந்த முனிவர்களே,
இந்த நால் மாடம் ஓங்கும் ஆலவாய் இடத்து - இந்த நான் மாடமாகிய
சிறந்த திருவாலவாயின்கண், அந்தணர் தமக்கு ஓர் முட்டி - அந்தணர்கட்கு
ஒரு பிடி அரிசியாவது, அருந்தவர் தமக்கு ஓர் பிச்சை - செய்தற் கரிய
தவத்தை யுடையார்க்கு ஒரு பிடி அன்னமாவது, தந்தவர் யாரேனும் -
கொடுத்தவர்கள் யாவராயினும், புறம்புசெய்த - வேறு இடங்களில்
செய்யப்பட்ட, சோடச தானம் தம்மால் வந்தபேறு அடைவர் - சோடச
தானத்தால் வரும் பயனைப் பெறுவர் (ஆயின்), பல்வேறு உரைப்பது என்
- பல வேறு வகைப்படக் கூறுவது என்னை; (கூற வேண்டா) எ - று.

     நான் மாடக் கூடல் என்னும் பெயர் கடைகுறைந்து நின்றது. நான்
மாடம் ஓங்கிய என்னலுமாம்; முட்டி - கைவிரல்களை மடக்கியிருப்பது.
அரிசி, அன்னமென்பன கொள்க. சோடச தானம் - பதினாறு வகைத்
தானம். தம் : சாரியை. உரைப்பது : தொழிற் பெயர். முற் கூறியவாற்றானே
பெறப்படு மென்பார் 'உரைப்பதென' என்றார், (16)

பல்வகைத் தலங்க ளெல்லாம் வைகிய பயனு மென்றும்
பல்வகைத் தீர்த்த மெல்லா மாடிய பயனு மென்றும்
பல்வகைத் தான மெல்லா நல்கிய பயனு மென்றும்
பல்வகைத் தான பூசை பண்ணிய தவத்தின் பேறும்.

     (இ - ள்.) பல் வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனும் -
பலவகையான பதிகளிலெ்லாம் வசித்தலால்வரும் பயன்களும், என்றும் -
எப்போதும், பல்வகைத் தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனும் - பலவகையான
தீர்த்தங்களனைத்திலும் நிராடியதனால் வரும் பயன்களும் - என்றும் -
எந்நாளும், பல்வகைத் தானம் எல்லாம் நல்கிய பயனும் - பலவகையான
தானங்களனைத்தும் செய்தமையால் வரும் பயன்களும், என்றும் -
எக்காலத்தும், பல் வகைத்து ஆன பூசை பண்ணிய தவத்தின் பேறும் -
பல வகைகளை யுடையதாகிய பூசையைச் செய்த தவத்தால் வரும்
பயன்களும் எ - று.