I


தீர்த்தவிசேடப் படலம்171



சென்றுதன் மேனித் தேசாற் றிசையெலாம் விளங்கச் செங்கண்
வென்றிகொ ளுரக வேந்த னகரமும் விபுதர் வேந்தன்
பொன்றிகழ் நகரும் வேதன் புரமுமால் புரமு மேலைத்
தன்றிரு நகருஞ் சென்று சஞ்சரித் தாடி மீள்வான்.

     (இ - ள்.) தன் மேனித் தேசால் - தனது திருமேனியின் ஒளினிால்,
திசை எலாம் விளங்கச் சென்று - திக்குகள் எல்லாம் ஒளிவீசப் போய்,
செங்கண் - சிவந்த கண்களையுடைய, வென்றி கொள் உரக வேந்தன்
நகரமும் - வெற்றியைக் கொண்ட பாம்புகளின் அரசனாகிய அனந்தனுடைய
உலகத்திலும், விபுதர் வேந்தன் - தேவர்கட்கு அரசனாகிய இந்திரனது,
பொன் திகழ் நகரும் - விளங்காநின்ற பொன்னுலகத்திலும், வேதன்
புரமும் - பிரமனது உலகத்திலும், மால் புரமும் - திருமாலின் உலகத்திலும்,
மேலைத் தன் திரு நகரும் - அவைகளின் மேலுள்ள தனது
சிவலோகத்திலும், சென்று சஞ்சரித்து ஆடி மீள்வான் - சென்று உலாவித்
திருவிளையாடல் செய்து மீண்டருளுவான் எ - று.

     திகழ் பொன் நகரு மென்க. மேலை - மேலுள்ளதாகிய; 'எழின்
முடியதாஞ் சிவலோகம்' என்பர் பின்னும். (5)

அன்னபோ தயனுந் தேவர்க் கரசனு மாழி வேந்தும்
முன்னர்வந் திறைஞ்சி யேத்த முனிவரும் பேறு நல்கித்
தன்னக ரடைந்து நீங்காத் தனிப்பெருங் கணத்தி னோரை
இன்னருள் சுரந்து நோக்கி யிலிங்கத்திற் புகுது மெல்லை.

     (இ - ள்.) அன்னபோது - அப்பொழுது, அயனும் - பிரமனும்,
தேவர்க்கு அரசனும் - தேவேந்திரனும், ஆழி வேந்தும் - திகிரிப்
படையையுடைய திருமாலும், முன்னர் வந்து இறைஞ்சி ஏத்த - திருமுன்
வந்து வணங்கித் துதிக்க, முனிவு அரும் பேறு நல்கி - (அவர்களுக்கு)
வெறுப்பில்லாதவரங்களைக்கொடுத்து, தன்நகர் அடைந்து - தனது
திருவாலவாயை அடைந்து, நீங்காத் தனிப்பெருங் கணத்தி னோரை
பிரியாத ஒப்பற்ற பெரிய கணத்தலைவர்களை, இன் அருள் சுரந்துநோக்கி -
இனிய அருள் கூர்ந்து பார்த்து, இலிங்கத்தில் புகுதும் எல்லை -
இலிங்கத்திற் சென்றெய்தும் பொழுதில் எ - று.

     முன்னர், ஆர் : பகுதிப் பொருள் விகுதி. முனிவு அரும் - வெறுத்த
லில்லாத; மகிழ்தற் குரிய என்றபடி. இலிங்கம் - ஒளியுடையது, அடை யாளம்,
சிவனது அருவுருவத் திருமேனி (6)

வேத்திரப் படையோ னாதி கணாதிபர் வீழ்ந்து பால
நேத்திர வன்பர்க் கன்ப நிரஞ்சன நிருத்தா னந்த
சாத்திர முடிவுந் தேறாத் தனிமுத லொருவ வென்னாத்
தோத்திர வகையாலேத்தித் தொழுதொன்று வினாவல் செய்வார்.

     (இ - ள்.) வேத்திரப் படையோன் ஆதி கணாதிபர் - பிரம்புப்
படையையுடையோனாகிய நந்தி முதலிய கணத்தலைவர்கள், வீழ்ந்து -