I


தீர்த்தவிசேடப் படலம்177



எனவரும் திருவானைக்காப் புராணச் செய்யுட்களா லுணர்க. சூக்தம் -
நன்றாகச் சொல்லப்பட்டது என்னும் பொருளது; இது தமிழில் சூத்தமெனவும்,
சூக்க மெனவும் திரியும். எப்பொருளும் - எல்லாப் பொருள்களும்
ஈந்ததனால் வரும் பேறு. (18)

தெய்வவித் தீர்த்தந் தன்னை நினைவின்றித் தீண்டி னாலும்
அவ்விய வினையி னீந்தி யரும்பெறல் வீடு சேர்வர்
இவ்வுரை மெய்யே யாகு மென்னெனின் மனத்தா னன்றி
வெவ்வழ றீண்டி னாலுஞ் சுடுமன்றி விடுமோ வம்மா.

     (இ - ள்.) தெய்வ இத்தீர்த்தம் தன்னை - தெய்வத்தன்மை
பொருந்திய இத் தீர்த்தத்தை, நினைவு இன்றி தீண்டினாலும் - நினைப்
பில்லாது தொட்டாலும், அவ்விய வினையின் நீந்தி - தீவினையினின்றுங்
கடந்து, அரும் பெறல் வீடு சேர்வர் - பெறுதற்கரிய வீடு பேற்றை யடைவர்;
இ உரை மெய்யே ஆகும் - இந்த வார்த்தை உண்மையே யாகும்; என்
எனில் - எப்படி என்றால், மனத்து ஆறு அன்றி - மனத்தின் வழியன்றி
(நினைப்பில்லாமல்), தீண்டினாலும் - தொட்டாலும், வெவ் அழல் - கொடிய
தீயானது, சுடும் அன்றி விடுமோ - சுடுமேயல்லாது விட்டு விடுமோ (விடாது)
எ - று.

     அவ்வியம் - அழுக்காறு, மனக்கோட்டம்; தீவினை அதனாற்
செய்யப்படுதலின் 'அவ்விய வினை' என்றார். ஒளவியமென்பது போலி
யாயிற்று. பெறலரும் என்பது முன் பின்னாகத் தொக்கது. எவன் என்பது
என்னென்றாயது. ஏ : தோற்றம். ஓ : எதிர்மறை. அம்மா : வியப்பிடைச்
சொல். இஃது எடுத்துக் காட்டுவமை. (19)

ஆருமந் நீரி லென்று மாடினார் சீவன் முத்தி
சேருவ ரந்நீ ராடுஞ் சிறப்புறு பயனுக் கொவ்வா
வாருண மாக்கி னேய மந்திர மிவைமுன் னான
பேருணர் வளிக்கு நானஞ் செய்தவர் பெறும்பே றெல்லாம்.

     (இ - ள்.) ஆரும் அந்நீரில் என்றும் ஆடினார் - நிறைந்த
அத்தீர்த்தத்தில் எப்பொழுதும் மூழ்கியவர், சீவன் முத்தி சேருவர் - சீவன்
முத்தியையடைவர்; அந்நீர் ஆடும் - அத்தீர்த்தத்தில் மூழ்குவதால்
வருகின்ற, சிறப்புறு பயனுக்கு - சிறப்பையடைய பயனுக்கு, வாருணம் -
வருண நானமும், ஆக்கினேயம் -அங்கி நானமும், மந்திரம் - மந்திர
நானமும், இவை முன் ஆன - இவை முதலான, பேர் உணர்வு அளிக்கும்
- பெரிய ஞானத்தைக் கொடுக்கின்ற, நானம் செய்தவர் - நானம் செய்தவர்,
பெறும் பேறு எல்லாம் ஒவ்வா - அடையும் பயன் அனைத்தும் ஒப்பாகா
எ - று.

     ஆடினார் ஆருமென்றுமாம். வாருணம் - நீரினியைபுடையது.
ஆக்கினேயம் - அக்கினியி னியைபுடையது; நீறு. நானம் - ஸ்நானம்;
திருமுழுக்கு. வாருண மந்திரம், ஆக்கினேய மந்திரம் எனக்கொள்ளுதல்
பொருந்தாது. (20)