I


182திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     விழுங்கு தினம் - கிரகண நாள். விதிபாதம் - மாதந்தோறும் வரும்
யோகங்களிலொன்று. அத்தொகை - அவை. அம்முறை அதிக பலன்
ஆகும் என்றது நாடொறுஞ் செய்தலினும் அமாவாசையிற் செய்தல் நூறு
மடங்கும், மாதப்பிறப்பிற் செய்தல் ஆயிரமடங்கும், கிரகண நாளிற் செய்தல்
நூறாயிரமடங்கும். விதிபாதநாளிற் செய்தல் அளவின்றியும் மிக்க
பலனுடையவாகும் என்றவாறு. ஒன்றற் கொன்று - ஒன்றின்னொன்று.

பொருவரிய தகர்த்திங்க டுலாத்திங்க
     ளிவையுதிக்கும் போது மூழ்கின்
ஒருபதினா யிரமடங்காஞ் சுறவுகவைத்
     தாளலவ னுதிப்பின் மூழ்கின்
இருபதினா யிரமடங்கா மிந்திரவி
     யிடத்தொடுங்கு மிந்து வாரம்
வருவதறிந் தாடிமனு வோதன்முதல்
     செயினனந்த மடங்குண் டாகும்.

     (இ - ள்.) பொருவு அரிய - ஒப்பில்லாத, தகர்த் திங்கள் - சித்திரை
மாதமும், துலாத் திங்கள் இவை - ஐப்பசி மாதமுமாகிய இவைகள்,
உதிக்கும் போது மூழ்கின் - பிறக்கு நாழிகையில் மூழ்கினால், ஒரு
பதினாயிரம் மடங்கு ஆம் - பதினாயிரமடங்கு பலன் ஆகும்; சுறவு - தை
மாதமும், கவைத்தாள் அலவன் - பிறவுபட்ட காலையுடைய கற்கடகமாகிய
ஆடி மாதமுமாகிய இவைகள், உதிப்பின் மூழ்கின் - பிறக்கு நேரத்தில்
மூழ்கினால், இருபதினாயிரம் மடங்கு ஆம் - இருபதினாயிர மடங்கு பலன்
ஆகும்; இந்து இரவி இடத்து ஒடுங்கு - சந்திரன் சூரியனிடத் தொடுங்குகின்ற,
இந்த வாரம் வருவது அறிந்து - திங்கட்கிழமை வருவதை உணர்ந்து,
ஆடி மனு ஓதல் முதல் செயின் - நீராடி மந்திரஞ் செபித்தல் முதலிய
வற்றைச் செய்தால், அனந்த மடங்கு உண்டாகும் - அளவற்ற பலன்
உண்டாகும் எ - று.

     தகர் - மேடம். சுறவு - மகரம். அலவன் - கடகம். சித்திரை ஐப்பசி;
தை, ஆடி : என்னும் மாதங்கள் பிறக்கும் பொழுதும், அமாவாசையுடன்
கூடியதிங்கட்கிழமையும் கூறப்பட்டன. சுறவு, அலவன் என்பன அத்
திங்களைக் குறிப்பன. உதிப்பின் - உதித்தற்கண். அலவன் என்னும் பெயர்
நோக்கிக் கவைத்தாள் என அடை கொடுத்தார். (30)

பிரயாகை தனின்மகா மதிநாண்முப்
     பதுங்குடைந்து பெறும்பே றிந்தத்
திரையார்பைந் தடத்தொருநாண் மூழ்குவோன்
     பெறும்விரத சீலம் பூண்டு
வரையாம லொருவருடம் படிந்துமையை
     யமரர்சிகா மணியாம் வேத
உரையானை வழிபடுமேன் மலடிக்கும்
     நன்மகப்பே றுண்டா மன்னோ.