I


தீர்த்தவிசேடப் படலம்183



     (இ - ள்.) பிரயாகைதனில் - பிரயாகையில், மகரமதி - தைமாதத்தில்,
முப்பது நாளும் குடைந்து - முப்பது நாளும் மூழ்கி, பெறும் பேறு -
அடையும் பயனை, இந்தத் திரை ஆர் பைந் தடத்து - இந்த அலைகளை
யுடைய பசிய தீர்த்தத்தில், ஒரு நாள் மூழ்குவோன் பெறும் - ஒரு நாள்
மூழ்குவோன் அடைவான்; விரத சீலம் பூண்டு - விரத ஒழுக்கத்தை
மேற்கொண்டு, வரையாமல் - தவறாமல், ஒருவருடம் படிந்து - ஓராண்டு
மூழ்கி, உமையை - அங்கயற் கண்ணியையும், அமரர் சிகாமணி ஆம் -
தேவர்கள் சூளாமணியாகிய, வேத உரையானை - வேதமாகிய
திருவாக்கையுடைய சோமசுந்தரக் கடவுளையும், வழிபடுமேல் -
வழிபடுவாளானால், மலடிக்கும் நன் மகப்பேறு உண்டாம் - மலடிக்கும்
அறிவறிந்த மக்கட் பேறு உண்டாம் எ - று.

     பிரயாகை - திரிவேணிசங்கமம். முப்பது என்றது வழக்குப் பற்றி;
சாந்திரமானத்தால் எனினுமாம். விரதமும் சீலமு மென்னலு மாம். வரைதல்
- நீக்கல்; தவிர்தல். உமையையும் உரையானையும் என உம்மை விரிக்க.
மலடிக்கும் என்னும் உம்மை இழிவு சிறப்பு. மன், ஓ : அசை. (31)

எண்டிசைய நதிவாவி வடிவான
     மாதீர்த்த மெல்லா மிப்பொற்
புண்டரிகத் தடத்திலொரு கோடியிலோர்
     கூறுநிகர் போதா வீது
கண்டதனா லறந்தீண்டப் பெற்றதனா
     னற்பொருளங் கையா லள்ளிக்
கொண்டதனா லின்பநலம் குடைந்ததனாற்
     பேரின்பங் கொடுக்கு மன்றே.

     (இ - ள்.) எண்திசைய - எட்டுத் திங்குகளிலுமுள்ள, நதிவாவி
வடிவு ஆன - நதிவடிவும் தடாக வடிவுமான, மா தீர்த்தம் எல்லாம் -
பெரிய தீர்த்தங்களி லாடிய பயன் அனைத்தும், இப்பொன் புண்டரிகத்
தடத்தில் ஒரு கோடியில் - இந்தப் பொற்றாமரையில் ஆடிய பயன் ஒரு
கோடியியல், ஓர் கூறு நிகர் போதா - ஒரு கூற்றுக்கும் ஒப்பாகக் கூறப்
போதாதன, ஈது - இந்தத் தீர்த்தமானது, கண்டதனால் அறம் - தரிசித்தலால்
அறத்தையும், தீண்டப் பெற்றதனால் நல்பொருள் - தொடப் பெற்றதனால்
நல்ல பொருளையும், அம் கையால் அள்ளிக் கொண்டதனால் இன்ப நலம்
- அகங்கையால் அள்ளிக் கொண்டதனால் இன்பமாகிய நலத்தையும்,
குடைந்ததனால் பேர் இன்பம் கொடுக்கும் - மூழ்கியதனால் பேரின்பமாகிய
வீட்டையுங் கொடுக்கும் எ - று.

     தீர்த்தம், தடம் என்பன பயனுக்காயின. நிகர் போதா : ஒரு
சொல்லுமாம்; ஒப்பாகா என்றபடி. உறுதிப் பொருள் நான்கனையுந் தரும்
என்றார். சுட்டு நீண்டது. கண்டது முதலியன தொழிற் பெயர்கள். அன்று,
ஏ : அசை. (32)