கலிகட லிரவி தோன்றக் கருகிரு ளுடையு மாபோல்
ஒலிகெழு பெருங்கா றள்ள வுடைபடு மேகம் போல
வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போலக்
குலிசவல் லேறு தாக்கப் பொடிபடுங் குன்றம் போல. |
(இ
- ள்.) கலிகடல் - ஒலிக்கின்ற கடலின்கண், இரவி தோன்ற -
சூரியன் உதித்தலால், கருகு இருள் உடையுமா போல் - கருகிய இருள்
அழியுந் தன்மை போலவும், ஒலி கெழு - ஒலி மிகுந்த, பெருங்கால் தள்ள
- பெரிய காற்றுத் தள்ளுதலால், உடைபடு மேகம்போல் - மேகம் சிதைதல்
போலவும், வலி கெழு - வலிமிக்க, மடங்கல் சீற - சிங்கம் கோபிக்க,
மாயும் மால் யானைபோல - பெரிய யானை அழிதல் போலவும், குலிசம்
வல் ஏறு தாக்க - வச்சிரப்படையாகிய வலிய இடியேறு தாக்குதலால், பொடி
படு குன்றம் போல - மலைகள் துகள் பட்டு அழிதல் போலவும் எ - று.
தோன்ற
என்பது முதலிய செயவெனெச்சங்கள் காரணப் பொருளன.
மேகம் முதலிய பெயர்களை மாற்றித் தொழிலுவம மாக்குக. மடங்கல் -
சிங்கம்; மடங்கி முன்னும் பின்னும் நோக்குவது பற்றி வந்த பெயர். (15)
மருட்சிசெய் காம நோயான் மதிகெடு மாறு போல
அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடு மவிச்சை போலத்
தருக்குறு முவணஞ் சீறத் தழலரா விளியு மாபோற்
செருக்குற வழியுங் கல்விபோற் சிதையு மன்றே.
|
(இ
- ள்.) மருட்சி செய் - மயக்கத்தைச் செய்கின்ற, காம நோயால்
- காமநோயினால், மதிகெடுமாறு போல - அறிவுகெடுந் தன்மை போலவும்,
அருள் சிவஞான நோக்கால் - அருளையுடைய சிவ ஞானப் பார்வையினால்,
வலி கெடும் அவிச்சை போல - அஞ்ஞானம் வலிகெட்டு அழிதல்
போலவும், தருக்கு உறும் உவணம் சீற - செருக்கு மிக்க கருடன்
கோபித்தலால், தழல் அரா விளியுமாபோல் - நஞ்சினையுடைய பாம்புகள்
அழிதல் போலவும், செருக்கு உற - தருக்குப் பொருந்துதலால், அழியும்
கற்ற கல்விபோல் - கற்றகல்வி அழிதல் போலவும், சிதையும் - கெட்டு
விடும் எ - று.
செருக்கினையே
அறியாமை யாக்கி,
"வெண்மை யெனப்படுவ தியாதெனி னெண்மை
யுடையம்மா மென்னுஞ் செருக்கு" |
எனத் தெய்வப்
புலவர் கூறியிருப்பது இங்கு நோக்கற் பாலது. மேல்
'இறைசினோர் பாவமெல்லாம்' என நிறுத்திய எழுவாய் இச்செய்யுளிற்
'சிதையும்' என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. அன்று, ஏ : அசை. (16)
|