I


கடவுள் வாழ்த்து21



திருப்பதிகளுக்கும் சென்று பதிகம்பாடி இறைவன்பால் பொற்றாளம்,
முத்துச்சிவிகை முதலிய பெற்றுப் பல அற்புதம் புரிந்து மதுரையையடைந்து
அடியார் கூட்டத்துடன் தங்கியிருக்கும்பொழுது சமணர்கள் பொறாமையினால்
திருமடத்திற் றீவைக்க, அக்கொடுஞ்செயல் அரசன் முறை செய்யாமையால்
நிகழ்ந்ததென உட்கொண்ட பிள்ளையார் அத்தீயானது சென்று பாண்டியனை
வெப்பு நோயாகப் பற்றுமாறு அருளி, மங்கை யர்க்கரசியாரின்
வேண்டுகோளுக்கிணங்கிப் பின் அம்மன்னனது வெப்புநோயைத திருநீற்றால்
மாற்றிச் சமணனாயிருந்த அவ்வரசனைச் சைவனாக்கிச் சமணரை வாதில்
வென்று தமிழ்நாடு முழுதும் சைவம் தழைத்தோங்கச் செய்தனர் என்பது.

     இதன் விரிவைப் பெரியபுராணத்திலுள்ள அவரது புராணத்திலும்,
இந்தப் புராணத்திலுள்ள பாண்டியன் சுரந்தீர்த்த படலத்திலும் கண்டுகொள்க.

     தாதைபோல் என்றது தந்தையினியல்பு பிள்ளையிடத்தும்
விளங்குமென்பது குறிப்பித்தவாறாம். (18)

ஆளுடைய அரசுகள்
அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா*
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்.

     (இ - ள்.) அறப்பெரும் செல்வி - முப்பத்திரண்டு அறங்களையும்
வளர்த்த பெரிய செல்வியாராகிய உமையம்மையாரை, பாகத்து - ஒரு
கூற்றிலுடைய, அண்ணல் - பெருமை பொருந்திய இறைவனின், அஞ்சு
எழுத்தால் - திருவைந்தெழுத்தாகிய புணையினாலே, அஞ்சா பழிக்கு
அஞ்சாத, மறப்பெரும் செய்கை - பெரிய பாவச்செய்கையினின்றும், மாறா -
நீங்காத, வஞ்சகர் - வஞ்சகராகிய சமணர்கள், இட்ட நீலநிறப்
பெருங்கடலும் - கற்றூணோடு பிணித்துப் போகட்ட நீல நிறத்தையுடைய
பெரிய கடலையும், யார்க்கும் - எவ்வகையோராலும், நீந்துதற்கு அரிய -
கடப்பதற்கு முடியாத, ஏழு பிறப்பெனும் கடலும் - ஏழுவகையினையுடைய
பிறவி என்னுங் கடலையும், நீத்த - ஒரு சேரக் கடந்தருளிய, பிரான் -
திருநாவுக்கரசரின், அடி - திருவடிகளை, வணக்கம் செய்வாம் -
வணங்குவாம் எ - று.

     அஞ்சா, மாறா என்னும் பெயரெச்சமறைகள் வஞ்சகர் என்னும்
பெயருடன் தனித்தனி முடிந்தன. அஞ்ச என்பது பாடமாயின் அதனை
இட்ட என்பதனோடு முடிக்க. ஈரிடத்தும் கடலும் என்பதிலுள்ள உம்மைகள்
எண்ணுடன் சிறப்புங் குறித்தன. ஏழு பிறப்பாவன : தேவர், மக்கள், விலங்கு,
பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பன.


     (பா - ம்.) * அஞ்ச.