I


பதிகம்211



சேரன் - கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமான்; அறுபத்து மூன்று
தனியடியாருள் ஒருவர். திருமுகம் - ‘மதிமலி புரிசை’ என்னும் பாசுரம்.
பகை - ஈழநாட்டுப் பாடினி. அவை - இராசராச பாண்டியன் அவைக்
களம். (10)

வயவேனக் குருளைகளை மந்திரிக
     ளாக்கியதும் வலியுண் டாகக்
கயவாய்க்குக் குருமொழிவைத் தருளியது
     நாரைக்குக் கருணை நாட்டந்
தயவால்வைத் தருண்முத்தி நல்கியதுங்
     கூடனகர் தன்னைச் சித்தர்
புயநாகம் போய்வளைந்து திருவால
     வாயாக்கிப் போந்த வாறும்.

     (இ - ள்.) வய ஏனக் குருளைகளை - வெற்றியையுடைய அந்தப்
பன்றிக் குட்டிகளை, மந்திரிகள் ஆக்கியது - அமைச்சர்களாகச் செய்
தருளியதும், கயவாய்க்கு - கரிக்குருவிக்கு, வலி உண்டாக - ஏனைய
பறவைகளைவிட வலிமை உண்டாகுமாறு, குருமொழ வைத்தருளியது -
உபதேசித் தருளியதும், நாரைக்குக் கருணை நாட்டம் தயவால் வைத்தருள்
- நாரைக்கு அருட் பார்வையைக் கருணையோடு வைத்தருளி, முத்தி
நல்கியதும் - வீடுபேற்றை அருளியதும், சித்ர் புயநாகம் போய் - எல்லாம்
வல்ல சித்தரின் கையில் அணிந்த கங்கணமாகிய நாகமானது சென்று,
கூடல் நகர் தன்னை வளைந்து - நான்மாடக்கூட லாகிய நகரை வளைந்து,
திருவாலவாய் ஆக்கிப் போந்தவாறும் - அதனைத் திருவாலவாய் என்னும்
பெயருடைய தாக்கி வந்த தன்மையும் எ - று.

     கயவாய் - கரிக்குருவி. குருமொழி வைத்தல் - உபதேசித்தல்.
வைத்தருளி யென்பது இகர விகுதி குறைந்து நின்றது; அருள் என்பதனை
முத்திக்கு அடையாக்கலுமாம். (11)

சுந்தரனென் றெழுதியகூ ரம்பெய்து
     செம்பியன்போர் தொலைத்த வாறுஞ்
செந்தமிழோர்க் கியற்பலகை யருளியதுந்
     தருமிக்குச் செம்பொன் பாடித்
தந்ததுவு மாறுபடு கீரற்குக்
     கரையேற்றந் தந்தவாறும்
விந்தமடக் கியமுனியாற் கீரனியற்
     றமிழ்தெளிய விடுத்த வாறும்.

     (இ - ள்.) சுந்தரன் என்று எழுதிய - சுந்தரன் என்று பெயர்
எழுதப்பட்ட, கூர் அம்பு எய்து - கூரிய அம்பினை விடுத்து, செம்பியன்
போர் - சோழன் செய்த போரினை, தொலைத்தவாறும் - அழித்த
தன்மையும், செந்தமிழோர்க்கு இயல்பகை அருளியதும் - தூய தமிழை