I


கடவுள் வாழ்த்து23



               ஆளுடைய நம்பிகள்
அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூது கொண்டோ னிணையடி முடிமேல் வைப்பாம்.

      (இ - ள்.) அரவு அகல் அல்குலார்பால் - பாம்பின் படம்போலும்
அகன்ற நிதம்பத்தையுடைய மகளிரிடத்து, ஆசை - அவாவை, நீத்த
வர்க்கே - ஒழித்தவர்களுக்கே, வீடுதருவம் என்று - பேரின்ப வீட்டைக்
கொடுப்பேமென்று, அளவு இல் வேதம் - எண்ணிறந்த வேதங்களால்,
சாற்றிய - கூறியருளிய, தலைவன் தன்னை - முதல்வனாகியசிவபிரானையே,
பரவைதன் - பரவை நாய்ச்சியாரின், புலவி தீர்ப்பான் - ஊடலை நீக்கும்
பொருட்டு, கழுது கண்படுக்கும் - பேயும் உறங்கப் பெறுகின்ற, பானாள்
இரவினில் - நள்ளிரவில், தூதுகொண்டோன் - தூதாகக் கொண்ட
சுந்தரமூர்த்திநாயனாரின், இணையடி - இரண்டு திருவடிகளையும், முடிமேல்
வைப்பாம் - சென்னியின் மேல் வைப்பாம் எ - று.

     மடவாராசையை யொழித்தவர்க்கே பேரின்பங் கைகூடு மென்பதனை,

"அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுந்ல லிட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றினு மண்ணிக்குங் காண்மினோ"

என்னும் திருக்குறுந்தொகையானுமறிக. நீத்தவர்க்கே என்பதில் ஏகாரம்
பிரிநிலையும் தேற்றமும் ஆம். தருவம் என்னும் பன்மை உயர்வு குறித்தது.
வேதத்தால் என்னும் மூன்றனுருபும், கழுதும் என்னும் சிறப்பும்மையும்
விகாரத்தாற்றொக்கன. தன் இரண்டும் சாரியை. விதிவரம்பு செய்த
தலைவனே அவ்விதிக்கு மாறாகத் தாம் புரியுஞ் செய்கைக்கு உதவிசெய்யப்
புரிந்த வல்லாளன் என்று சமற் காரம்படக் கூறினார். நம்பியாரூரர் தம்மை
ஆட்கொண்டருளிய சிவபெருமானாலேயே கூட்டுவிக்கப்பெற்று அப்போகம்
புசிக்கு மிடத்து,

"தென்னாவ லூர்மன்னன் றேவர்பிரான் றிருவருளால்
மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனு மெல்லியறன்
பொன்னாரு முலையொங்கற் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்"

என்று சேக்கிழார்பெருமான் கூறுமாறு அதனையே சிவயோகமாகக்
கொண்டொழுகிய பெரியாராகலின், அவர் சிவப்பேறாகிய நலத்தினின்
வழாராயினாரென்க.

     சிவபிரானைத் தூதுகொண்ட வரலாறு : - திருமுனைப்பாடி
நாட்டிலே திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே சடையனார் என்பவர்க்கு
இசைஞானியார் வயிற்றிலே திருவவதாரஞ் செய்த நம்பியாரூரர் அந்நாடாளும்