I


இந்திரன் பழிதீர்த்த படலம்235



இவ்வகை மயங்கிப் போர்செய் திறந்தவ ரொழியப் பின்னுங்
கைவகை யடுபோர் செய்து கரையிறந் தார்கண் மாண்டார்
அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணர் வேந்துந்
தெய்வதப் படைகள் வீசிச் சீறிநின் றடுபோர் செய்வார்.

     (இ - ள்.) இவ்வகை மயங்கி - இங்ஙனம் கலந்து, போர் செய்து,
இறந்தவர் ஒழிய - போர் செய்து மாண்வர்கள் நீங்க, பின்னும் - பின்பும்,
கைவகை - கைவரிசையின் வகையால், அடுபோர் செய்து -
கொல்லுதலையுடைய மற்போரினைச் செய்து, கரை இறந்தார்கள் மாண்டார் -
அளவிறந்தவர்கள் இறந்தனர்; அவ்வகை அறிந்து - அவ்வாறு மாண்டதை
அறிந்து, வானத்து அரசனும் அவணர் வேந்து - தேவேந்திரனும்
அசுரேந்திரனும், தெய்வதப் படைகள் வீசி - தெய்வத் தன்மையுடைய
படைகளை விடுத்து, சீறி நின்று அடுபோர் செய்வார் - கனன்று நின்று
கொல்லுதலையுடைய போரினைச் செய்வாராயினர் எ - று.

     கை - கைத்திறம். கை வகை - ஒழுங்காகிய படை வகுப்பு என்பாரும்
உளர். (44)

அனற்படை விடுத்தான் விண்ணோ
     ராண்டகை யதனைக் கள்வன்
புனற்படை விடுத்துச் சீற்றந்
     தணித்தனன்* புனிதன் காற்றின்
முனைப்படை விடுத்தான் வெய்யோன்
     முழங்குகால் விழுங்கு நாகச்
சினப்படை தொடுத்து வீசி
     விலக்கினான் றேவ ரஞ்ச.

     (இ - ள்.) விண்ணோர் ஆண் தகை - தேவர்கள் தலைவனாகிய
இந்திரன், அனல் படை விடுத்தான் - தீக் கணையை விட்டான்; கள்வன் -
விருத்திரன், புனல் படை விடுத்து - நீர்க்கணையை விடுத்து, அதனைச்
சீற்றம் தணித்தனன் - அதனுடைய வெகுளியைத் தணித்தான்; புனிதன் -
தூயவனாகிய இந்திரன், காற்றின் முனைப் படை விடுத்தான் - கூரிய காற்றுக்
கணையை விடுத்தான்; வெய்யோன் - கொடியவனாகிய விருத்திரன், முழங்கு
கால் - ஒலிக்கின்ற காற்றினை, விழுங்கும் - உண்ணுகின்ற, நாகச் சினப்படை
- கோபத்தையுடைய பாம்புக்கணையை, தொடுத்து வீசி - வில்லிற் பூட்டி
விடுத்து, தேவர் அஞ்ச விலக்கினான் - தேவர்கள் அஞ்சும்படி
(அக்கணையைத்) தடுத்தான் எ - று.

     அனற்படை முதலியன ஆக்கினேயாஸ்திரம் முதலிய பெயர்களால்
வடமொழியில் வழங்கப்பெறும். ஆண்டகை - ஆண்மையாகிய தகுதியை
யுடையான்; வீரன் : அன்மொழித் தொகை. அதனை : அதனுடைய;
வேற்றுமை மயக்கம்; சீற்றந் தணித்தனன் என்பதனை ஒரு சொல்லாகக்
கொண்டு அதனை யென்னும் இரண்டாவதற்கு முடிபாக்கினும் அமையும். (45)

     (பா - ம்.) * சிந்தத் துணிந்தனன்.