I


236திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நாகமாப் படைவிட் டார்த்தா னாகர்கோ னுவணச் செல்வன்
வேகமாப் படையை வீசி விலக்கினான் றகுவர் வேந்தன்
மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவனன்ன
தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான்.

     (இ - ள்.) நாகர்போன் - தேவர்க்கரசன். நாகம் மாப்படை விட்டு
ஆர்த்தான் - பெரிய பாம்புக் கணையை விடுத்துப் பேரொலி செய்தான்;
உவணச் செல்வன் - கருடனாகிய செல்வனது, மாவேகப் படையை வீசி -
பெரிய வேகத்தையுடைய கணையை விடுத்து, தகுவர் வேந்தன் விலக்கினான்
- அசுரர் மன்னன் (அக் கணையை) மாற்றினான்; முனைவன் - இந்திரன், மா
மோகப்படையைத் தொட்டு முடுக்கினான் - பெரிய மயக்கத்தைத் தருகின்ற
கணையை எடுத்து விரைந்து தூண்டினான், மா படிறன் - பெரிய
வஞ்சகனாகிய அசுரன், அன்னது ஏக - அம் மையற் கணை ஒழிய,
ஞானப்படை விடுத்து - ஞானக் கணையை விடுத்து. இருள் போல் நின்றான்
- இருளைப்போல நின்றான் எ - று.

     தகுவர் - அசுரர். மோகப்படை - மோகனாஸ்திரம். முனைவன் -
முதல்வன். ‘படிறன் ஞானப்படை விடுத்து இருள்போல நின்றார்’ என்பதில்
விரோதமாகிய அழகு அமைந்திருத்தல் காண்க. இச்செய்யுட்கு, முதலில்
அசுரன் என்னுஞ் சொல்லை வருவித்து, அசுரன் நாகமாப் படை
விட்டார்த்தான் என் றிம்முறையாற் பொருள் கூறினரு முளர்; சொற்கிடக்கை
முறை அதற்கேலாமை காண்க. (46)

மட்டிடு தாரான் விட்ட வானவப் படைக்கு மாறு
விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன்
முட்டிட மான வெங்கான் மூட்டிடக் கோபச் செந்தீச்
சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிப னிதனைச் செய்தான்.

     (இ - ள்.) மட்டு இடு தாரான் விட்ட - தேனைப் பொழிகின்ற
மாலையையுடைய இந்திரன் விடுத்த, வானவப் படைக்கு - தெய்வக்
கணைகளுக்கு, மாறுவிட்டு உடன் விலக்கி - பகைக் கணைகளை விடுத்து
உடனே விலக்கி, வேறும்விடுத்திட - வேறுகணைகளையும் விடுப்பதற்கு
வஞ்சன் கனன்று முட்டிட - வஞ்சகனாகிய விருத்திரன் சினந்து நெருங்க,
சுராதிபன் - தேவேந்திரன், மானவெம் கால் மூட்டிட - மான மாகிய
வெவ்விய காற்றானது மூட்ட, கோபச் செந்தீ - கோபமாகிய சிவந்த தீயானது,
சுட்டிட - சுடுதலால், பொறாது பொங்கி - ஆற்றாது சீறி, இதனைச் செய்வான்
- இதனைச் செய்வானாயினன் எ - று.

     வேறும் - வேறு கணையும்.. மானவெங்கால், கோபச் செந்தீ என்பன
உருவகம், முட்டிட, சுட்டிட என்பவற்றில் இடு : துணைவினை. சுராதிபன் :
தீர்க்க சந்தி. (47)

வீங்கிரு ளொதுங்க மேக மின்விதிர்த் தென்னக் கையில்
ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிர்த்த லோடுந்
தீங்குளம் போன்றி ருண்ட திணியுடற் கள்வ னஞ்சி
வாங்கிருங் கடலில் வீழந்தான் மறைந்தமை நாக மொத்தான்.