I


240திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



      வைகும், அடக்கும் என்னும் பெயரெச்சங்கள் முறையே இடப்
பெயரும், கருவிப் பெயரும் கொண்டன. உழுந்து அமிழுமள வென்க.
இதென் : விகாரம். ஈதோரதிசயமாமா என்றவாறு. கொல் : அசை. வையமும்
என்னும் உம்மை தொக்கது. இது வேற்றுப் பொருள் வைப்பணி. (53)

அறந்துறந் தீட்டு வார்த மரும்பெறற் செல்வம் போல
வறந்தன படுநீர்ப் பௌவம் வடவைகட் புலப்பட டாங்கு
நிறைந்த செம் மணியு மத்தீ நீண்டெரி சிகையோ னீண்
சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா.

     (இ - ள்.) அறம் துறந்து ஈட்டுவார்தம - அறத்தைக் கைவிட்டுத்
தேடுபவர்களின், அரும் பெறல் செல்வம்போல - பெறுதற்கரிய
செல்வத்தைப்போல, படு நீர்ப் பௌவம் வறந்தன - ஆழமாகிய நீரினை
யுடைய கடல் முழுதும் வற்றின; வடவைகண் புலப்பட்டாங்கு - அங்குள்ள
வடவைத் தீ கண்களுக்குத் தோன்றினாற்போல, நிறைந்த செம் மணியும் -
மிகுந்த செந்நிறத்தையுடையமாணிக்கங்களும்,அத்தீநீண்டு எரி சிகைபோல் -
அந் நெருப்பு உயர்ந்து எரிகிற் கொழுந்து போல, நீண்டு சிறந்து எழு
பவளக்காடும் - ஓங்கிச் சிறப்புற் றெழுந்த பவளக் காடும், திணி இருள்
விழுங்கிற்று - மிக்க இருளை விழுங்கின எ - று.

     அறந்துறந் தீட்டுதல் - பழிபாவங்களான் ஈட்டுதல். பெறலரும் என
மாற்றுக. படுநீர் - மிக்க நீர்; ஒலிக்கின்ற நீருமாம். வறந்தன எனப்
பன்மையாகக் கூறினமையால் கடலின் எல்லா இடங்களும் என்றாவது
எல்லாக் கடல்களும் என்றாவது கொள்க. திணிஇருள் - செறிந்த இருள்.
விழுங்கிற்று என்னும் வினையைச் செம்மணி, பவளக் காடு என்பவற்றுடன்
தனித்தனி கூட்டுக. அம்மா : வியப்பிடைச்சொல். ‘விழுங்குமன்றே’
எனப்பாடங்கொண்டாருமுளர்; அவர்பலவிடத்தும் தாமாகவே பாடங்களை
மாற்றிக் கொண்டிருத்தலின் அவைகொள்ளற் பாலன வல்லவென்க. (54)

பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப் பல்கா
சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான்
மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த்
திணியுட லவுணன் பட்ட செங்கள மனைய தன்றே.

     (இ - ள்.) பணிகளின் மகுடகோடிப் பரப்பு என - (கடலானது,
பாதரத்திலுள்ள) பாம்புகளின் மகுட வரிசையின் பரப்பைப்போல, விளங்கி -
ஒளி வீசி, பல்காசு அணிகலப பேழை - பல மணிகள் பதித்த
அணிகலன்களை வைத்த பெட்டியின், பேழ்வாய் திறந்து அனைத்து ஆகி -
பெரிய வாயைத் திறந்து வைத்ததுபோலாகி, ஒன்பான் மணி கிடந்து அமைக்கு
நீரால் - ஒன்பது வகை மணிகளும் தங்கி ஒளிவிடுந் தன்மையால், மகபதி
வேள்விக்கு ஆவாய் - இந்திரன் வேள்விக்குப் பசுவாகி, திணி உடல்
அவுணன் பட்ட - வலிய உடலையுடைய வலாசுரன் இறந்துபட்ட, செங்களம்
அனையது - போர்க்களம் போன்றது எ - று.

     பணி - படத்தையுடையது எனக் காரணக்குறி; பணம் - படம். கோடி
- வரிசை; மிகுதியுமாம். பல் காசினையும் அணிகலங்களையுமுடைய பேழை