கைதவ நோன்பு நோற்குங் கள்வனைக் கண்டு வானோர்
செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான்போற்
பொய்தவன் றலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி
பெய்தது வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை.* |
(இ
- ள்.) வானோர் செய்தவம் அனையான் - தேவர்கள் செய்த
தவத்தினை ஒத்த இந்திரன், கைதவ நோன்பு நோற்கும் கள்வனைக் கண்டு -
வஞ்சனையையுடைய தவத்தினைச் செய்யும் கள்வனாகிய விருத்திரனைக்
கண்டு, யாணர் வச்சிரம் சீரிப்பான் போல் - புதிய குலிசப் படையைப்
பழக்குவான்போல, பொய்தவன் தலையைக் கொய்தான் - பொக்கின்ற
தவத்தினையுடைய விருத்திரனது தலையை அறுத்தான்; குருதி பொழிந்தது;
வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை - இந்திரனைப் பிரமக் கொலைப்
பாவம் பற்றியது எ - று.
போருக்குடைந்து
நோற்பான் போல் ஒளித்திருந்தமையின் கைதவ
நோன்பு நோற்கும் என்றார். உயிர்க்குறுகண் செய்யாமை தவத்திற்
கிலக்கணமாகவும் வானோர்க்குத் துன்பமுண்டாதல் கருதி நோற்றமையில்
என்னலுமாம். நோன்பென வந்தமையின் நோற்றல் செய்தல் என்னும்
மாத்திரையாய் நின்றது. யாணர் புதுவருவாய் என்னும் பொருட்டு : புதிது
படற்பொருட்டே யாணர்க் கிளவி என்பது தொல்காப்பியம்;
பின்னாளில்
இது புதுமை, அழகு என்னும் பொருள்களில் வழங்குகிறது. சீரித்தல் -
பரீக்கித்தல். பொய் - பொய்த்தலை யுடைய : வினைத்தொகை. உடலினின்றும்
சோரி பெய்தது என்றாதல், உடல் சோரியைப் பெய்தது என்றாதல் கொள்க.
வேள்வியிற் றோன்றியவனும் தவஞ் செய்வோனும் ஆகியவனைக்
கொன்றமையின் பிரமச் சாயை பிடித்தது. (58)
உம்மெனு மார்பைத் தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு
வம்மெனும் வாய்ம டிக்கும் வாளெயி+றதுக்கும் வீழுங்
கொம்மென வோடு மீளுங் கொதித்தெழுஞ் சிரிக்குஞ் சீறும்
இம்மெனு மளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே. |
(இ
- ள்.) இம் எனும் அளவு நீங்காது - (அக்கொலைப் பாவம்) இம்
என்று கூறும் அளவும் நீங்காததாய், உம் எனும் - உம் என்று அதட்டும்;
மார்பைத் தட்டும் - தனது மார்பைத் தட்டும்; உருத்து எழும் - கோபித்து
எழும்; அதிர்க்கும் - பேரொலி செய்யும்; போர்க்கு வம் எனும் - போருக்கு
வாருங்கள் என்னும்; வாள் எயிறு அதுக்கும் - ஒள்ளிய பற்களை அதுக்கும்;
வீழும் - குப்புற்று வீழும்; கொம்மென ஓடும் - விரைந்து ஓடும்; மீளும் -
திரும்பும்; கொதித்து அழும் - பொங்கி அழும்; சிரிக்கும் - பெருநகை
செய்யும்; சீறும் - சீறாநிற்கும்; என் செய்வான் - (ஆதலால்) என்ன செய்வான்
இந்திரன், அஞ்சினான் - பயந்தான் எ - று.
உம்மெனும்
: ஒலிக்குறிப்பு. கொம்மென, இம்மெனும் என்பன விரைவுக்
குறிப்புகள். வம்மின் என்பது ஈறு கெட்டு நின்றது. எயிற்றால் அதுக்கு
மென்றுமாம். (59)
(பா
- ம்.) * பிரமசாயை. +வாலெயிறு.
|