I


இந்திரன் பழிதீர்த்த படலம்243



விரைந்தரன் றிசையோர் வாவி வீழ்ந்தொரு கமல் நூலுட்
கரந்தனன் மகவா னிப்பால் கற்பக நாடு புல்லென
றிருந்ததா லிருக்கு மெல்லை யிம்பரி னகுட னென்போன்
அரும்பரி மேத வேள்வி யாற்றினா னாற்று மெல்லை.

     (இ - ள்.) மகவான் - இந்திரனானவன், அரன் திசை ஓர் வாவி -
ஈசான திசையில் உள்ள ஒரு குளத்தில், விழைந்து வீழ்ந்து ஒரு கமல நூலுள்
கரந்தனன் - விரைவாகக் குதித்து ஒரு தாமரைத்தண்டின் நூலினுள்
மறைந்தான்; இப்பால் கற்பக நாடு புல்லென்று இருந்தது - இப்புறம்
தேவவுலகம் பொலிவழிந்திருந்தது; இருக்கும் எல்லை - அங்ஙனமிருக்குங்
காலததில், இம்பரில் நகுடன் என்போன் - நிலவுலகில் நகுடனென்னும்
மன்னன், அரும்பரி மேதவேள்வி ஆற்றினான் - அரிய அசுவமேதயாகிய
வேள்வியைச் செய்தான்; ஆற்றும் எல்லை - அங்ஙனம் செய்துவரும்
பொழுதில் எ - று.

     அரன் திசை - ஈசான திசை, வடகிழக்கு; ஈசான திசையிலுள்ள
உருத்திர வுலகத்தில் என்று சிலர் கூறுவர். தாமரை நாளத்திலுள்ள நூல்.
ஆல் : அசை. நகுடன் சந்திர வமிசத்து ஆயுவின் மகன், யயாதி
முதலானோர்க்குத் தந்தை. (60)

அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடர் யாரும்
விரைசெய்தார் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டார்வேந்தாய்
வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளார்போய்த்
திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள்.

     (இ - ள்.) வானாடர் யாரும் - தேவர்களனைவரும், அரசு இலா
வறுமை நோக்கி - தங்கட்கு மன்னனில்லாத வறுமையைக் கருதி, அவனை
- அந் நகுடனை, விரைசெய்தார் மகுடம் சூட்டி - மணம் வீசும்
மாலையையுடைய முடியைச் சூட்டி, வேந்தனாக் கொண்டார் - அரசனாகக்
கொண்டார்கள்; வேந்தாய் வருபவன் - அரவனாய் வந்த நகுடன், சசியை
ஈண்டுத் தருகென - இந்திராணியை இங்கு அழையுங்கள் என்ன, மருங்குளார்
போய் - பக்கத்திலுள்ளவர்கள் போய், திரை செய் நீர் அமுது அன்னாட்கு -
அலைகளை வீசுகின்ற கடலிற் றோன்றிய அமுதத்தை யொத்த இந்திராணிக்கு,
செப்ப - சொல்ல அக் கற்பின் மிக்காள் - அந்தக் கற்பின் மேம்பட்டவள்
எ - று.

     யாரும் என்பது எஞ்சாமை குறித்தது. மகுடஞ் சூட்டி யென்பதனை ஒரு
சொல்லாகக் கொண்டு அவனை யென்னும் இரண்டாவதற்கு முடி பாக்குக.
ஆக என்பது ஈறு தொக்கது. ஆய் - ஆகி. தருகென : அகரம் தொகுத்தல்.
(61)

பொன்னுயிர்த் தனைய காட்சிப்
     புண்ணியக் குரவன் முன்போய்
மின்னுயிர்த் தனையா ணின்று
     விளம்புவா ளிதென்கொல் கெட்டேன்