(இ
- ள்.) மனிதரின் மகவான் ஆகி வருபவன் - மனிதருள்
இந்திரனாகி வருகின்ற நகுடன், சிவிகை தாங்கும் - சிவிகையினைச் சுமந்து
வருகின்ற, புனிதமாதவரை எண்ணான் - தூய முனிவர்களின் பெருமையை
அறியாதவனாயும், புன்கண்நோய் விளைவும் பாரான் - துன்ப நோய் மேலே
வினைவதையும் பாராதவனாயும், கனிதரு காமம் தூய்க்கும் காதலால் -
கனிந்த காம இன்பத்தை நுகருமாசையால், விரையச் செல்வான் - விரைந்து
செல்லும் பொருட்டு, இனிது அயிராணி பால் - இனிதாக இந்திராணியிடத்து,
கொண்டு ஏகுமின் சர்ப்ப என்றான் - எடுத்துக்கொண்டு செல்லுங்கள் விரைய
என்று கூறினான் எ - று.
வருபவன்
: நிகழ்கால முணர்த்திற்று. மாதவர் பெருமையை என்க.
புன்கண் நோய் : ஒரு பொருளிருசொல். எண்ணான், பாரான் என்பன
முற்றெச்சங்கள். தரு : துணைவினை. சர்ப்ப : விரைந்து செல்க என ஏவுதற்
சொல். (64)
சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்கிமுன் னடக்குந் தென்றல்
வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும்
பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத
அற்பரா னவர்க்குச் செல்வ மல்லது பகைவே றுண்டோ. |
(இ
- ள்.) முன்கொம்பு தாங்கி - சிவிகையின் முன் கொம்பைத்
தாங்கி, முன் நடக்கும் தென்றல் வெற்பனாம் முனிவன் - முன்னே நடக்கின்ற
தென்றலுக்குப் பிறப்பிடமாகிய பொதியின் மலையை யுடைய அகத்தியன்,
சர்ப்பம் ஆகென - பாம்பாகக் கடவாயென்று, சாபம் விளைத்தனன் - சாபம்
கொடுத்தான்; விளைத்தலோடும் - அங்ஙனம் சாபமிட்டவுடனே, பொற்ப
மாசுணமே ஆகிப் போயினான் - பொலிவு பெறப் பெரும்பாம்பு வடிவாகிப்
போயினான்; அறிவு இலாத அற்பர் ஆனவர்க்கு - அறிவற்ற கீழ்மைக்குண
முடையவர்களுக்கு, செல்வம் அல்லது பகை வேறு உண்டோ -
செல்வத்தையன்றி பகையாயுள்ளது மற்றொன்று உண்டோ (இல்லை) எ - று.
ஆகென
: தொகுத்தல்; ஆகு என ஏவலுமாம்.
"குணமென்னுங்
குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது" |
என்பவாகலின் விளைத்தலோடும்
ஆகியென்றார். மாசுணம் - பெரும் பாம்பு.
இவ்வரலாறு,
"ஏந்திய கொள்கையார்
சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்" |
என்பதற்கு எடுத்துக்
காட்டாதல் காண்க. அறியாமையுடன் கூடிய
செல்வக்களிப்பாற் பாம்பாயினமையின் செல்வத்தைப் பகை யென்றார். இது
வேற்றுப்பொருள் வைப்பணி. (65)
பின்னர்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோர்
பொன்னகர் வேந்த னின்றிப் புலம்படை கின்ற தைய
என்னலுங் குரவன் போயவ் விலஞ்சியு ளொளித்தாற் கூவித்
தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டான். |
|