I


254திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தங்குடிமைத் தச்சனையோர் விமானம்மைத்
     திடவிடுத்தத் தடத்தின் பாற்போய்
அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய
     மலர்கிடையா தயர்வா னந்தச்
சங்கெறிதண் டிரைத்தடத்தி லரனருளாற்
     பலபரிதி சலதி யொன்றிற்
பொங்குகதிர் பரப்பிமுளைத் தாலென்னப்
     பொற்கமலம் பூப்பக் கண்டான்.

     (இ - ள்) தம் குடிமைத் தச்சனை - தமது குடிக்குரிய வேத தச்சனை,
ஓர் விமானம் அமைத்திட விடுத்து - ஓர் விமானம் படைக்கு மாறு ஏவி, அ
தடத்தின்பால் போய் - அந்தத் தீர்த்தத்தின் பக்கத்திற் சென்று, அங்கணனை
- அழகிய அருட்பார்வையுடைய இறைவனை, கடிது அருச்சித்திட - விரைந்து
அருச்சிப்பதற்கு, நறிய மலர் கிடையாது அயர்வான் - நல்ல மலர்கள்
கிடைக்கப் பெறாமல் வருந்துகின்றவன், சங்கு எறி - சங்குகளை வீசுகின்ற,
தண் திரை - குளிர்ந்த அலைகளை யுடைய, அந்தத் தடத்தில் - அந்தத்
தீர்த்தத்தில், அரன் அருளால் - சிவபெருமான் திருவருளால், பல பரிதி -
பல சூரியர்கள், சலதி ஒன்றில் - ஒரு கடலில், பொங்கு கதிர் பரப்பி
முளைத்தால் என்ன - நிறைந்த ஒளியை வீசிக்கொண்டு தோன்றினாற்போல,
பொன் கமலம் பூப்பக் கண்டான் - பொற்றாமரைகள் மலரப் பார்த்தான் எ-று.

     குடிமை, மை : பகுதிப் பொருள் விகுதி; குடியாந் தன்மையை யுடைய
தச்சன் எனலுமாம். கிடையாது - கைவரப் பெறாது. அயர்வான் : பெயர்.
அயர்வான் கண்டான் என முடிக்க. (80)

அன்புதலை சிறப்பமகிழ்ந் தாடினான்
     காரணத்தா லதற்கு நாமம்*
என்பதுபொற் றாமரையென் றேழுலகும்
     பொலிகவென விசைத்துப் பின்னும்
மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங்
     கொய்தெடுத்து மீண்டு நீங்காத்
தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு
     முதன்மருந்தின் றன்பால் வந்து.

     (இ - ள்.) அன்புதலை சிறப்ப மகிழ்ந்து - அன்பானது ஓங்கக்
களித்து, ஆடினான் - நீராடினான்; காரணத்தால் - (பொற்றாமரை மலர்ந்த)
ஏதுவினால்,அதற்கு நாமம் - அந்தத் தீர்த்தத்திற்குப் பெயர், பொற்றாமரை
என்று ஏழ் உலகும் பொலிக என இசைத்து - பொற்றாமரை யென்று
ஏழுலகங்களிலும் விளங்குக என்று கூறி, பின்னும் - மீளவும், மின்
பதுமத்தடம் குடைந்து - விளங்குகின்ற பொற்றாமரைத் தடத்தில் நீராடி,
பொன் கமலம் கொய்து எடுத்து - பொற்றாமரை மலர்களைப் பறித்தெடுத்து,
மீண்டு - திரும்பி,


     (பா - ம்.) * இதற்கு நாமம்.