I


258திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) அமரர் கோமான் - தேவர்க் கரசனானவன், பார் ஆர -
நிலந்தோய, அட்டாங்கபஞ்சாங்க விதிமுறையால் பணிந்து - அட்டாங்க
பஞ்சாங்க விதிப்படி வணங்கி, உள் வாய் மெய் - மனம் மொழி மெய் என்னு
மூன்றும், நேராக - ஒன்று பட, சூழ்ந்து - வலம் வந்து, உடலம் கம்பித்து -
உடல நடுங்கி, கும்பிட்டு - தொழுது, நிருத்தம் செய்து - கூத்தாடி, தார்
ஆரும் தொடை மிதப் - மலர்களால் நிறைந்த (மார்பின் மாலையானது
மிதக்கும்படி, ஆனந்தக் கண் அருவி ததும்ப - கண் களினின்றும் இன்ப
அருவியானது பெருக, நின்று - உருகி நின்று, ஆராமை அன்பு மீக்கொள -
(சிவானந்தம்) தெவிட்டாமையால் அன்பு மேன்மேல் மிக, அஞ்சலித்துத்
துதிக்கின்றான் - கைகூப்பித் துதிப்பானாயினான் எ - று.

     அட்டாங்கம் - எட்டுறுப்பு; பஞ்சாங்கம் - ஐந்துறுப்பு; அவை முற்
கூறப்பட்டன. தார் என்பது ஈண்டு மலரைக் குறிக்கின்றது. அன்பும்
ஆராமையும் என்னலுமாம். (86)

[- வேறு]
அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக
கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி
எங்கணா யகனே போற்றி யீறிலா முதலே போற்றி.

     (இ - ள்.) அங்கணா போற்றி - அழகிய கண்களையுடையவனே
வணக்கம்; வாய்மை ஆரணா போற்றி - உண்மையாகிய மறைகளை
அருளியவனே வணக்கம்; நாககங்கணாபோற்றி - அரவ கங்கண
முடையவனே வணக்கம்; மூலகாரணா போற்றி - மூலகாரணனே வணக்கம்;
நெற்றிச் செங்கணாபோற்றி - நெற்றியில் சிவந்தகண்ணையுடையவனே
வணக்கம்; ஆதி சிவ பரஞ்சுடரே போற்றி - (எல்லாவற்றுக்கும்) முதலாயுள்ள
சிவமாகிய பரஞ்சோதியே வணக்கம்; எங்கள் நாயகனே போற்றி - எங்கள்
தலைவனே வணக்கம்; ஈறு இலா முதலே போற்றி - முடிவு இல்லாத
முதற்பொருளே வணக்கம் எ - று.

     கண்ணுக்கு அழகாவது அருளுடைத்தாதல். போற்றி : வணக்கம் எனப்
பொருள்படும் தொழிற் பெயர்; காக்க என்னும் பொருட்டாய
வியங்கோளுமாம். காரண மெல்லாவற்றுக்கும் மூலமாகிய காரண மானவன்.
(87)

யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானாய் போற்றி யாவையு மல்லாய் போற்றி
யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி

     (இ - ள்.) யாவையும்படைப்பாய் போற்றி - அனைத்தையும் ஆக்குப
வனே வணக்கம்; யாவையும் துடைப்பாய் போற்றி - அவையனைத்தையும்
அழிப்பவனே வணக்கம்; யாவையும் ஆனாய் போற்றி - எல்லாமு மானவனே
வணக்கம்; யாவையும் அல்லாய்போற்றி - அவை முற்றும்