I


இந்திரன் பழிதீர்த்த படலம்259



அல்லாதவனே வணக்கம்; யாவையும் அறிந்தாய் போற்றி - எல்லாவற்றையும்
உணர்ந்தவனே வணக்கம்; யாவையும் மறந்தாய் போற்றி - அவை முற்றவும்
அறியாதவனே வணக்கம்; யாவையும் புணர்ந்தாய் போற்றி -
எலலாவற்றுள்ளும் கலந்தவனே வணக்கம்; யாவையும் பிரிந்தாய் போற்றி -
அவற்றுள் ஒன்றிலும் கலவாதவனே வணக்கம் எ - று.

     இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் இருக்குந்தன்மை முற் கூறப்பட்டது;
ஆண்டுக் காண்க. (88)

இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீர்த்துன்
அடியிணைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்
மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடர்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி.

     (இ - ள்.) இடர் உறப்பிணித்த - துன்பத்தை யடையுமாறுபற்றிய,
இந்தப் பழியில் நின்று - இந்தக் கொலைப் பாவத்தினின்றும்; என்னை ஈர்த்து
- அடியேனை விடுவித்து, உன் அடி இணைக்கு அன்பன் ஆக்கும் - உன்
இரண்டு திருவடிகளுக்கும் அன்பானாகச் செய்த, அருள் கடல் போற்றி -
கருணைக்கடலே வணக்கம்; சேல் கண் மடவரல் மணாள போற்றி -
மீன்போன்ற கண்களையுடைய அங்கயற்கணம்மையின் நாயகனே வணக்கம்;
கடம்ப மா வனத்தாய் போற்றி - பெரிய கடம்பவனத்தினையுடையவனே
வணக்கம்; சுடர்விடு விமானம் மேய - ஒளி வீசும் விமானத்திற்பொருந்திய,
சுந்தர விடங்கபோற்றி - சுந்தர விடங்க்னே வணக்கம் எ - று.

     உற - மிக வென்றுமாம். ஈர்த்து - இழுத்து; ‘ஈர்த்தென்னையாட்
கொண்ட’ என்பது திருவாசகம். மேய - மேவிய என்பதன் விகாரம்.
விடங்கன் - அழகன்; முன்னர்க் கூறினமை காண்க. சுந்தரனாகிய
விடங்கனென்க. (89)

பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு* நல்கும்
ஈசனு மாகிப் பூசை யான்செய்தே னெனுமென் போத
வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி.

     (இ - ள்) பூசையும் - பூசனையும், பூசைக்கு ஏற்ற பொருள்களும் -
பூசைக்குத் தகுதியான, உபகரணங்களும், பூசைசெய்யும் நேசனும் - பூசை
செய்கின்ற அன்பனும், பூசைகொண்டு - பூசையை ஏற்றுக் கொண்டு, நியதியில்
பேறு நல்கும் ஈசனுமாகி - முறைப்படி பயனை அருளுகின்ற இறைவனுமாய்,
பூசை யான் செய்தேன் எனும் - பூசை யான் செய்தேனென்கின்ற, என் போத
வாசனை அதுவும் ஆன - என்னுடைய தற்போத வாசனையுமான, மறை
முதல் அடிகள் போற்றி - வேதமுதலாகிய இறைவ வணக்கம் எ - று.

     ‘செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்’ இறைவ
னென்றார்; அவன் ஆன்மாவோடு ஒற்றித்து நின்று செய்வித்துச் செய்தலால்;


     (பா - ம்.) * நியதியின் பேறு.