சிவஞான
போதத்தின் பதினொன்றாஞ் சூத்திரக் கருத்து நோக்கியது இது;
அவன் அந்நியமின்றிச் செய்பவர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்
என்னும் வார்த்திகமும் காண்க.
"அறிவானுந் தானே
யறிவிப்பான் றானே
அறிவா யறிகின்றான் றானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம்
அப்பொருளுந் தானே யவன்" |
என்னுங்
காரைக்கா லம்மையார் திருவாக்கும் இக்கருத்தே யுடையது.
பூசனை புரிவார் எல்லாவற்றையும் இறைவன்பால் ஒப்புவித்தல்
வேண்டுமென்பதும் இதனாற் பெறப்படும். (90)
என்னநின்
றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற
முன்னவ னடியா ரெண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்
உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து
சென்னிமேற் செங்கை கூப்பித் தேவர்கோ னிதனை வேண்டும். |
(இ
- ள்.) என்ன நின்று ஏத்தினானை - என்று சொல்லி நின்று
துதித்தவனை நோக்கி, முன்னவன் - யாவருக்கும் முதல்வனும், அடியார்
எண்ணம் முடிப்பவன் - அடியார்கள் எண்ணியதை எண்ணிய வண்ணம்
முடிப்பவனுமாகிய இறைவன், இன் நகை சிறிது தோன்ற - இனிய புன்னகை
தோன்ற, அருட்கண் நோக்கால் - அருள் நோக்கத்தோடு, உன்னது வேட்கை
யாது - உன்னுடைய விருப்பம் யாது, இங்கு உரை என - இங்குச்
சொல்லுவாயென, தேவர் கோன் - தேவேந்திரன். விரையத் தாழ்ந்து -
விரைவில் வணங்கி, சென்னிமேல் செங்கை கூப்பி - முடியின் மேல் சிவந்த
கைகளைக் குவித்து, இதனை வேண்டும் - இதனை வேண்டுவானாயினன்
எ - று.
நோக்கியென
ஒரு சொல் வருவிக்க. அருட்க ணோக்கால், கண் :
நோக்கிற்கு அடை; ஆல்; ஒடுவின் பொருட்டு. உன்னது : னகரம் விரித்தல்.
இதனை பிற்கூறப் படுவதனை. (91)
ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனா மளவி னீங்கா
வெய்யவென் பழியினோடு மேலைநா ளடியேன் செய்த
மையல்வல் வினையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவு முரிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ. |
(இ
- ள்.) ஐய - ஐயனே நின் இருக்கை எல்லைக்கு அணியனாம்
அளவில் - உன் இருப்பிடத்தின் எல்லைக்கு அணியனாகிய உடனே, நீங்கா
- நீங்காத, வெய்ய - கொடிய, என் பழியினோடு - எனது கொலைப்
பாவத்தோடு, மேலை நாள் அடியேன் செய்த - முற் பிறப்புக்களில்
அடியேனால் செய்யப்பட்ட, மையல் வல்வினையும் - மயக்கத்தைத் தரும்
வலிய தீவினையும், மாய்ந்து - அழிந்து, உன் மலர் அடி வழுத்தி - நின்
தாமரை மலர்போலும் திருவடிகளைத் துதித்து, பூசை செய்யவும்
உரியனானேன் - பூசனை புரியவும் தகுதி யுடையவனானேன்; இதன் மேல் -
இதைவிட, சிறந்த பேறு யாது - பெறத்தக்க சிறந்த பயன் யாதுளது எ - று.
|