I


இந்திரன் பழிதீர்த்த படலம்263



எழுந்து கண் அருவி துளும்பினான் - எழுந்து கண்களினின்றும்
இன்பவருவிளை ஒழுக்கினான்; பல்முறை துதிசெய்து ஆடினான் -
பலமுறையுந் துதிமொழி கூறிக் கூத்தாடினான்; ஐயன் அடி பிரிவு ஆற்றாது
அஞ்சினான் - இறைவன் திருவடிகளைப் பிரிவதற்கு ஆற்றாமல் அஞ்சினான்;
அவன் அருள் ஆணை நாடினான் - அவன் அருளிய ஆணையை நாடி,
பிரியா விடைகொடு - உள்ளம் பிரியாத விடை பெற்று, துறக்கம்
நண்ணினான் - துறக்க வுலகிற் சென்றான் எ - று.

     அஞ்சலி - கூப்பிய கை. ஆணை - அருளிப்பாடு. பிரியாவிடை -
பிரிதற்கு மனம் பொருந்தாத விடை. (96)

[எண்சீரடியாசிரிய விருத்தம்]
வந்தரமங் கையர்கவரி மருங்கு வீச
     மந்தாரங் கற்பகம்பூ மாரி தூற்ற
அந்தரநாட் டவர்முடிக ளடிகள் சூட
     வயிராணி முலைத்தடந்தோய்ந் தகலந் திண்டோள்
விந்தமெனச் செம்மாந்து விம்மு காம
     வெள்ளத்து ளுடலழுந்த வுள்ளஞ் சென்று
சுந்தரநா யகன்கருணை வெள்ளத் தாழ்ந்து
     தொன்முறையின் முறைசெய்தான் றுறக்க நாடன்.

     (இ - ள்.) அரமங்கையர் மருங்கு வந்து கவரி வீச - தேவமகளிர்
பக்கத்தில் வந்து சாமரை இரட்டவும், மந்தாரம் கற்பகம் பூமாரி தூற்ற -
மந்தாரமும் கற்பகமும் மலர் மழை பொழியவும், அந்தரநாட் டவர்கள்
முடிகள் அடிகள் சூட - துறக்க நாட்டினையுடைய தேவர்களின் முடிகள்
அடிகளாகிய (மலரை) அணியவும், அயிராணி முலைத்தடம் தோய்ந்து -
இந்திராணியின் பெரிய கொங்கைகளி லழுந்தி, அகலம் திண்தோள் - மார்பும்
வலிய தோள்களும், விந்தம் எனச் செம்மாந்து - விந்த மலையைப்போல
இறுமாந்து, விம்மு காமவெள்ளத்துள் உடல் அழுந்த - பெருகிய காம
வெள்ளத்தினுள் உடலானது அழுந்தி நிற்க, உள்ளம் சென்று - மனமானது
சென்று, சுந்தரநாயகன் கருணை வெள்ளத்து ஆழ்ந்து - சோமசுந்தரக்
கடவுளின் அருள் வெள்ளத்தில் அழுந்தி நிற்க, துறக்க நாடன் - தேவ
வுலகத்தினையுடைய இந்திரன், தொல் முறையில் - பழைய முறைப்படியே,
முறை செய்தான் - அரசு புரிந்தான் எ - று.

     ஐந்தருக்களில் இரண்டு கூறினமையால் ஏனையவுங் கொள்க.
செம்மாந்து என்னுஞ் சினைவினை முதன்மேல் நின்றது; செம்மாக்க என்பதன்
திரிபுமாம். ஆழ்ந்து : எச்சத்திரிபு. (97)

ஆகச் செய்யுள் - 439.