I


282திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கழிப்பான் எடுத்த சிந்தையின் - அவ்வகையே (தரிசித்துக்) கழிக்கு மாறு
கிளர்ந்த உள்ளத்தோடு, இருந்தனன் - இருந்தான், இருக்கும் அ இருள்வாய்
(அங்ஙனம்) இருக்கப்பெற்ற அந்த இருட்பொழுதில் எ - று

     சின்தையின் - சிந்தையோடு. (7)

சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி
வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த
காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி
யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவார்.

     (இ - ள்) அன்று சோமவாரம் ஆதலால் - அந்த நாள் திங்கட்
கிழமை ஆகலின்; அங்கு சுரர்கள் எய்தி - அங்கே தேவர்கள் வந்து,
வாமம் மேகலை மலைமகள் தலைமகன் - ஒளியினையுடைய மேகலையை
அணிந்த பார்ப்பதியின் தலைவனாகிய சிவபெருமானுடைய, மலர்ந்த காமர்
சேவடி பணிந்து - மலர்ந்த அழகிய சிவந்ததிருவடிகளை வணங்கி, அவன்
கங்குல் போல் கருதி - அவன் இரவாகிய சிவநிசிபோல எண்ணி, யாமம்
நான்கினும் - நான்கு யாமங்களிலும், இன்பு உற அருச்சனை புரிவார் -
இன்பம் பொருந்த அருச்சிப்பாராயினார் எ - று.

     வாமம் - அழகுமாம்; ‘வாமமேகலை மங்கையர்’ என்றார் பிறரும்.
தலைமகன் - மணாளன். காமர் - விருப்பம் பொருந்திய வென்றுமாம்;
இதற்குக் காமம் மருவென்பன காமர் எனத் தொக்கு ஒரு சொல்லாயின
வெனக் கொள்க. அவன் கங்குல் - சிவராத்திரி. (8)

அண்டர் வந்தது மருச்சனை புரிவது மனைத்துந்
தொண்ட ரன்பினுக் கெளியவன் சுரர்தொழக் கறுத்த
கண்ட னின்னருட் கண்ணினாற் கண்டன னுதலிற்
புண்ட ரம்பயி லன்புடைப் புண்ணிய வணிகன்.

     (இ - ள்.) அண்டர் வந்ததும் - அமரர்கள் வந்ததும், அருச்சனை
புரிவதும் அனைத்தும் - அருச்சனை செய்வதுமாகிய எல்லாச் செயல்களையும்,
தொண்டர் அன்பினுக்கு எளியவன் - அடியார்களின் அன்புக்கு
எளிவருபவனும், சுரர் தொழக் கறுத்த கண்டன் - தேவர்கள் வணங்கி
முறையிடக் கறுத்தருளிய திருமிடற்றையுடையவனுமாகிய இறைவனுடைய,
இன் அருள் கண்ணினால் - இனிய அருட் பார்வையால், நுதலில் புண்டரம்
பயில் - நெற்றியில் மூன்று கீற்றாகத் தங்கிய திருநீற்றினையுடைய,
அன்புடைப் புண்ணிய வணிகன் கண்டனன் - அன்பு நிறைந்த
அறத்தினையுடைய வணிகனாகிய தனஞ்சயன் பார்த்தான் எ - று.

     நஞ்சுண்ட வென்பதனைக் கறுத்தவெனக் காரியத்தாற் கூறினார்.
வணிகன் அனைத்தும் கண்டனன் என வியையும். அருளன்றித் தன்
கண்ணினாற் காணலாகாமையின் ‘அருட் கண்ணினாற் கண்டனன்’
என்றார். (9)