I


288திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



புனைந்த மௌலியென்க, புனைந்த தார் எனினுமாம். சொற்பதம் : ஒரு பொருளிரு சொல்;

"சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க"

என்பது திருவாசகம். (21)

சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பர்க ணாயக பசுபதி சரணம்.

     (இ - ள்.) சரணம் - வணக்கம்; மங்கை ஓர் பங்கு உறை சங்கர
சரணம் - உமையம்மை ஒருபாதியி லுறையப்பெற்ற சங்கரனே வணக்கம்;
சரணம் - வணக்கம்; மங்கலம் ஆயி தனிமுதல் சரணம் - மங்கல வடிவாகிய
ஒப்பற்ற முதற்பொருளே வணக்கம்; சரணம் - வணக்கம்; மந்திர வடிவம்
ஆம் சதாசிவ சரணம் - மந்திர வடிவாகிய சதாசிவமூர்த்தியே வணக்கம்;
உம்பர்கள் நாயக சரணம் - தேவர்கள் தலைவனே வணக்கம்; பசுபதி
சரணம் உயிர்களின் தலைவ வணக்கம் எ - று.

     சரணம் - அடைக்கலம் என்றுமாம். ஈரிடத்து இரட்டித்துக் கூறினார்.
இறைவனுக்கு மந்திரம் வடிவமாதலை,

"சுத்தமாம் விந்துத் தன்னிற் றோன்றிய வாத லானுஞ்
சத்திதான் பிரேரித் துப்பின் றானதிட் டித்துக் கொண்டே
அத்தினாற் புத்தி முத்தி யளித்தலா லரனுக் கென்றே
வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்"

என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா லறிக. (22)

ஆழி ஞாலமே லாசையு மமரர்வான் பதமேல்
வீழு மாசையும் வெறுத்தவர்க் கன்றிமண் ணாண்டு
பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
ஏழை யேங்களுக் காவதோ வெந்தைநின் கருணை.

     (இ - ள்.) ஆழி ஞாலம் மேல் ஆசையும் - கடலாற் சூழப்பட்ட
நிலவுலகின் மேலுண்டாகும் இச்சையையும், அமரர் வான் பதம்மேல் வீழும்
ஆசையும் - தேவர்களின் உயர்ந்த பதவிகளின்மேல் சென்று பொருந்தும்
அவாவையும், வெறுத்தவர்க்கு அன்றி - உவர்த்தவர்களுக்கு எய்துவதே
அல்லாமல், மண் ஆண்டு - பூமியை ஆண்டு, பீழை மூழ்கி - துன்பத்தில்
அழுந்தி, வான் நரகொடு பிணிபடச் சுழலும் - சுவர்க்கத்திலும் நரகத்திலும்
கட்டுண்டு சுழலுகின்ற, ஏழை யேங்களுக்கு - அறிவிலேமாகிய எங்களுக்கும்,
எந்தை எம் தந்தையே, நின் கருணை ஆவதோ - நினது திருவருள் எய்தக்
கடவதோ எ - று.

     ஞாலமே லாசை, பதமேல் விழு மாசை - அவற்றை ஆளவேண்டு
மென்னும் ஆசை; அவற்றிலுள்ள போக விச்சையுமாம். வீழும் -
விரும்புமெனினுமாம். வான் நரகொடு புவியிலுஞ் சுழலும் என வருவித்
துரைத்தலுமாம்.