I


292திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இருணி ரம்பிய வனமெலா மெறிந்துமெய் யுணர்ந்தோர்
தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிர்க்கும்
அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
கருணை யன்பர்தம் பிறப்பென வேரொடுங் களைந்தார்*.

     (இ - ள்.) இருள் நிரம்பி வனம் எலாம் எறிந்து - இருள் மிகுந்த காடு
அனைத்தையும் வெட்டி, மெய் உணர்ந்தோர் - மெய்ப்பொருளை
உணர்ந்தவர்களின், தெருள் நிறைந்த சிந்தையின் - தெளிவு நிரம்பிய
உள்ளத்தைப்போல, வெளிசெய்து - வெட்டவெளி யாக்கி, பல் உயிர்க்கும்
அருள் நிறைந்து - பல உயிர்களிடத்தும் கருணை நிரம்பி, பற்று அறுத்து -
இருவகைப் பற்றையும் போக்கி, அரன் அடி நிழல் அடைந்த - சிவபெருமான்
திருவடி நீழலை அடைந்த, கருணை அன்பர் - திருவரு ணெறியினராகிய
அடியார்கள், தம் பிறப்பு என - தங்கள் பிறவியை வேரொடுங்
களைதல்போல, வேரொடுங் களைந்தார் - (வினை செய்வோர்) மரங்களை
வேரோடும் அகழ்ந்தார்கள் எ - று.

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற வகழ்ந்து போக்கித் தூர்வை செய்து"

என்று பட்டினத்தடிகள் அருளியாங்கு, மெய்யுணர் வுடையோர் மன மாசு
களைந்திருப்பராகலின் அவரது சிந்தைபோல் வெளிசெய்து என்றார். மனம்
தூய்மையுற்ற வழி உயிர்களிடத் தருளும், பற்றறுதியும், இறைவன்
திருவடியைப் பற்றுதலும், பிறப்புநீக்கமும் முறையே யுண்டாமாறு
குறிப்பிக்கப்பட்டமை காண்க. அன்பரது பிறப்பு வேருடன் ஒழிதல்போல்
ஒழியுமாறு களைந்தார் எனலுமாம். (31)

களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறி+படக் கண்டு
வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
விளைந்து தாதுகு தார்முடி வேந்தன்மந் திரரோ
டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்.

     (இ - ள்.) களைந்து - (இங்ஙனம்) மரங்களை அகழ்வித்து. நீள் நிலம்
திருத்தி - நீண்ட நிலத்தைச் செப்பஞ் செய்வித்து, செம் நெறி படக் கண்டு -
செவ்வியவழி உண்டாக்குவித்து, தேறல் விளைந்து - தேன் மிகுந்து, தாது
உகுதார் முடிவேந்தன் - மகரந்தஞ் சிந்தும் மாலையை யணிந்த
முடியினையுடைய பாண்டியன், வளைந்து நல்நகர் எடுப்பது - வளைவாக
நல்ல நகராக்கு, எவ்வாறு என - எங்ஙன மென்று, மந்திர ரோடு அளைந்து
அளாவிய - அமைச்சர்களோடு அளவாளவிய, சிந்தையோடு இருந்தனன் -
உள்ளத்தோடு இருந்தான்; அங்கண் - அவ்விடத்து எ - று.

     வளைந்து - வட்டமுறஎச்சத்திரிபு. தாதுடன் உகும் என்னலுமாம் :
உழுதார் என முதற்பெயர் கொண்டது. அளவளாவிய என்பது அளைந்


     (பா - ம்.) * களைந்தான். +சென்னெறி :