I


294திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தென்ன ரன்பினி லகப்படு சித்தர்தா முன்னர்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்
நன்ன ராலய மண்டபஞ் கோபுர நகரம்
இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தார்.

     (இ - ள்.) தென்னர் அன்பினில் அகப்படு சித்தர் - பாண்டியர் அன்பு
வலையில் அகப்படுஞ்சித்த மூர்த்திகள், தாம் முன்னர் சொன்ன ஆதிநூல் -
தாம் முன்னே கூறியருளிய முதனூல், வருவழி (நூல்) - அதன்வழி வந்த
வழிநூல், சார்புநூல தொடர்பால் - சார்புநூல் ஆகிய இவைகளிற் கூறிய
முறையால், நன்னர் ஆலயம் மண்டபம் கோபுரம் நகரம் - நன்றாகக்
கோயிலும் மண்டபமும் கோபுரமும் நகரமும், இன்னவாறு செய்யென
வகுத்து - இவ்வகையாற் செய்வாயாக என்று வகுத்துரைத்து, இம்மென
மறைந்தார் - விரைந்து மறைந்தார். எ - று.

     இறைவன் ‘பத்திவலையிற் படுவோன்’ என்பது தோன்ற அகப்படு
என்றார். ஆதிநூல் - முதனூல்; ஆகமம், வழிநூல் சார்பு நூல் - சிற்பநூல்
முதலியன. நன்னர் - நன்கு : பண்புப்பெயர். ஆலயம் - கருப்பக் கிருகம்.
இம்முறையானே செய்யவேண்டுமென்றார். இம்மென : விரைவுக் குறிப்பு. (35)

மறைந்தெ வற்றினு நிறைந்தவர் மலரடிக் கன்பு
நிறைந்த நெஞ்சுடைப் பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடர்வந்
தறைந்து வைத்தவா றாலய மணிநகர் காண்பான்.

     (இ - ள்.) எவற்றினும் மறைந்து நிறைந்தவர் - எல்லாப் பொருளினும்
மறைந்து நிறைந்த இறைவனுடைய, மலர் அடிக்கு அன்பு நிறைந்த நெஞ்சு
உடைப் பஞ்சவன் - மலர்போன்ற திருவடிகளில் அன்பு மிகுந்த
உள்ளத்தையுடைய பாண்டியன், நிலத்து மேம்பட்டுச் சிறந்த - நிலவுலகத்தில்
உயர்ந்து சிறந்த, சிற்பநூல் புலவரால் - சிற்பநூல் வல்ல அறிவுடையோர
்களால், சிவபரஞ்சுடர் வந்து - சிவ பரஞ் சோதியார் சித்தராய் எழுந்தருளி,
அறைந்து வைத்தவாறு - கூறியருளிய முறைப்படி, ஆலயம் அணிநகர்
காண்பான் - திருக்கோயில திருநகர முதலியன ஆக்கத் தொடங்கினான்
எ - று.

     இறைவன் மறைந்திருத்தலை,

"விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்"

என்னுந் தேவாரத்தா லறிக. எள்ளினுள் எண்ணெய்போல் உள்ளும் புறம்பும்
வியாபித்திருத்தலின் நிறைந்தவர் என்றார். பஞ்சவன் - பாண்டியன். மண்டப
கோபுரம் முதலியவற்றையும் அடக்கி ஈண்டு ஆலய மென்றார். (36)