I


கடவுள் வாழ்த்து3



           காப்பு

        [கலிவிருத்தம்]

சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.

     (இ - ள்.) சத்தியாய் - சத்தியாகியும், சிவம் ஆகி - சிவமாகியும்,
தனி - ஒப்பற்ற, பரமுத்தி ஆன - பரமுத்திப் பேறாகியும் உள்ள, முதலை -
முதற் கடவுளை, துதிசெய - துதித்தற்கு, சுத்தி ஆகிய - தூய்மையவான,
சொல் பொருள் - சொற்பளையும் பொருள்களையும், சித்தி யானைதன் -
யானை முகத்தையுடைய சித்திவிநாயகக் கடவுளின், செய்ய - செம்மையாகிய,
பொன் - அழகிய, பாதம் - திருவடிகள், நல்குவ - அருளுவன எ - று.

     இச்செய்யுள், எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பொருட்டுச்
செய்யற்பாலதென ஆன்றோ ரொழுக்கத்தான் அநுமிக்கற் பாலதாய மங்கலம்
கூறவெழுந்தது. மூத்த பிள்ளையாரின் திருவடிகளை வணங்குதலே இவண்
இடையூறு போக்கி நூலினை யினிது முடித்தற்குக் காரணமாகக்கொண்ட
மங்கலமாம்; இது காப்பு எனவும் படும். இறைவி பிடியுருவு கொள்ள
இறைவன் களிற்றுருவு கொண்டு அருளினமையின் பிள்ளையார்
யானைமுகத்துடன் றோன்று வாராயினர்; இதனையும், பிள்ளையார் வழிபடும்
அடியாரின் இடர்களைதற்கே இறைவனால் அருளப்பட்டவ ரேன்பதனையும்,

"பிடியா னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"