I


314திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அந்தக்கரண உணர்வனைத்தையுங் கடந்து, ஆனந்தவெள்ளம் ஆம் -
பேரின்பப் பெருக்காகிய, பரஞான வடிவு உடையாள் - பரஞானமே
திருவுருவாகிய உமையம்மை, தன் அன்பின் - தன் அன்பினாலே, வெளிவந்து
யாவர்க்கும் புலனாகும்படி வந்து, இன்று ஓர் பிள்ளையாய் அவதரித்த
கருணையும் - இப்பொழுது ஒரு பெண்மகவாய் அவதரித்த அருளையும்,
தன் மணாட்டி தவப்பேறும் தேறான் - தனது மனைவியின் தவப்பயனையும்
தெளியாதவனாய், பள்ளம் மா கடல் தானை - பள்ளமாகிய பெரிய
கடல்போன்ற சேனைகளையுடைய, பஞ்சவர்கோன் - பாண்டி மன்னன்,
நெஞ்சத்துள் பரிவு கூர்ந்தான் - மனத்தின்கண் துன்பமிகுந்தான் எ - று.
   

  "சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும்"

என்னும் சிவஞானசித்தியால் சத்தியின் வடிவு ஞானமாதலை யுணர்க.
மணவாட்டி யென்பது மணாட்டியென மருவிற்று. மா கடல், மா
உரிச்சொல்லாதலின் இயல்பாயிற்று. பரிவு கூர்ந்த வியல்பினை வருஞ்
செய்யுளிற் காண்க. (23)

மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந்
     தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ்செய்தே னதுவுமொரு
     பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு
     முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ வென்றுவகை
     யிலனாகி நலியு மெல்லை.

     (இ - ள்.) மகவு இன்றி - பிள்ளையில்லாமல், யான் பலபகல் வருந்தி
அருந்தவம் புரிந்தேன் - யான் பலகாலம் வருந்தி அரிய தவத்தைச்
செய்தேன்; (அதனால் எய்தாமையின் பின்னும்), மைந்தன்பேறு தக இந்த
மகம் செய்தேன் - புதல்வற் பேறு பொருந்த இந்த வேள்வியினைச் செய்தேன்; அதுவும் ஒரு பெண்மகவைத் தந்தது - அந்த வேள்வியும் ஒரு
பெண்பிள்ளையைக் கொடுத்தது; அந்தோ - ஐயோ, முக இந்து நிலவு ஒழுக
வரு பெண்ணும் - முகமாகிய மதியினின்றும் நிலவொழுகத் தோன்றி
இப்பெண்ணும், முலை மூன்றாய் முகிழ்த்து - முலைகள் மூன்றாக
அரும்பப்பெற்று, மாற்றார் நக வந்தது - பகைவர் சிரிக்கத் தோன்றியது;
என்னேயோ என்று - இஃது என்னையோ வென்று கருதி. உவகை இலனாகி
நலியும் எல்லை - மகிழ்ச்சி இல்லாத வனாய் வருந்தும் பொழுதில் எ - று.

     தக - பொருந்த. மகனை விரும்பிச் செய்ய மகளை யளித்தது.
அந்தோ : இரக்க விடைச்சொல்; அதனைப் பெண்ணும் என்பதன் பின்னே
கூட்டுக. நக - எள்ளி நகும்படி. என்னேயோ - இதற்குக் காரணம்
என்னையோ, நான் செய்த தவறு என்னையோ; ஓ : இரக்கத்தில் வந்தது. (24)