I


332திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) பை உள பகுவாய் நாகப் பள்ளியோன் ஆதி வானோர்
- படத்தின் கண் உள்ள பிளந்த வாயையுடைய பாம்பாகிய படுக்கையை
யுடைய திருமால் முதலிய தேவர்கள், கையுள வலியால் அட்ட கடல் அமுது
அனைத்தும் - கைகளில் உள்ள வலிமையால் கடைந்த கடலில் தோன்றிய
அமுத மனைத்தையும், வாரி - அள்ளி, பொய் உளம் அகலக் கற்ற புனிதநூல்
புலவர் - அறியாமை உளத்தினின்றும் நீங்குமாறு தூய நூல்களைக்
கற்றுணர்ந்த புலவர்கள், நாவில் செய்யுளின் விளைவித்து ஊட்ட -
நாவன்மையாற் செய்யுளில் விளையச் செய்து உண்பிக்க, திருச்செவி தெவிட்ட
உண்டும் - (தமது) திருச்செவிகள் தேக்கிடுமாறு நுகர்ந்தும் எ - று.

     வாரி விளைத்தூட்ட எனக் கூட்டுக. பொய்ம்மை யொழிதலே
புலமைக்குச் சான்றென்பார் ‘ பொய்யுள மகலக்கற்ற புலவர்’ என்றார்.
விளைவித்தல் - ஒன்பான் சுகைவளையும் உண்டாக்கல். விளைவித்தென்பதற்
கேற்பச் செய்யுளின் என்பதற்குச் செய்யின்கண்ணே யெனப் பொருள்
தொனித்ாலுங் காண்க; இதற்கு நாவாகிய ஏரால் எனவும் விரிக்க.
அமிழ்தத்தை முழுதும் பெய்து வைத்தாற்போலச் சுவைமிக்குடைய
செய்யுட்கள் என்றார். (55)

தொல்லைநான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கு மின்பம்
புல்லவா னமுதுங் கைப்பப் பாகநூற் புலவ ரட்ட
முல்லைவான் முகையி னன்ன வறுசுவை முரியா மூரல்
நல்லவூ னருத்தி யன்னார் நாவிந் தமுது செய்தும்.

     (இ - ள்.) தொல்லை நான்மறையோர் - பழைய நான்குமறைகளையுங்
கற்ற அந்தணர்களும், சைவர் துறந்தவர் யார்க்கும் - சைவர்களும்
துறவிகளும் ஆகிய அனைவருக்கும், இன்பம் புல்ல - மகிழ்ச்சி பொருந்த,
வான் அமுதும் கைப்ப - தேவாமுதமு கைக்குமாறு, பாக நூல் புலவர்
அட்ட -அடு நூல் வல்லவர் சமைத்த, முல்லை வால்முகையின் அன்ன
முரியா மூரல் - முல்லையினது வெள்ளிய அரும்பினை ஒத்த முரியாத
அன்னமும், அறுசுவை நல்ல ஊண் அருத்தி - அறுசுவை யமைந்த
கறிகளுமுதலிய நல்ல உணவுகளை உண்பித்து, அன்னார் நாவிருந்து
அமுதுசெய்து - அவர்களின் நாவால் வரும் புகழாகிய விருந்தினைத் தாம்
நுகர்ந்தும் எ - று.

     அட்ட மூரலும் சுவையுமுதலிய ஊண் என்றும், யார்க்கும் அருத்தி
என்றும் கூட்டுக. கைப்ப - கைப்பென்னுமாறு. பாக நூல் - பாக சாத்திரம்;
மடை நூல். முகையினன்ன மூரலும் அறுசுவையும் என வியையும். அறுசுவை
- கறி முதலியவற்றிற் காதலால் அடையடுத்த பண்பாகு பெயர். நாவிருந்து -
நாவாற் கூறும் புகழ் மொழியாகிய விருந்து. (56)

எல்லவ னுச்சி நீந்து மெல்லையி னான்கு மாறும்
வல்லவர் சூத னோதி வகுத்தமூ வாறு கேள்வி
சொல்லவுண் மலர்ந்து மேனை மனுமுதற் றுறைமாண் கேள்வி
நல்லன நயந்து கேட்டு நன்பகற் போது* நீத்தும்.

     (பா - ம்.) * நண்பகற்போது.