I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்335



தண்குடை - குளிர்ந்த குடைநிழலில் அமர்ந்து, மனுவேந்தன் கரை செய்
நூல்வழிகோல் செல - மனுவரசனால் வரையறை செய்யப்பட்ட நூலின்
வழியே தனது செங்கோல் செல்லுமாறு, கன்னியாம் பருவத்து அரசு
செய்தலால் - கன்னியாகிய பருவத்திலே ஆட்சி புரிந்தமையால், அந்நாடு
கன்னிநாடு ஆயது - அப்பாண்டி நாடானது கன்னி நாடு என்னும்
பெயரினைப் பெறுவதாயிற்று எ - று.

     வரைசெய், செய் : உவமச்சொல். மடம் என்னும் குணம் பொருந்து
தலையுடைமையால் மடவரல் என்பது பெய்களுக்கு ஒரு பெயர். மடம் -
மகளிர்க்குரிய நாற்குணங்களில் ஒன்று; ‘கொளுத்தக்கொண்டு கொண்டது
விடாமை’ என்பர் நச்சினார்க்கினியர் (61)

இன்ன வாறுமை யவதரித் திருந்தன ளென்னாப்
பொன்ன வாவினர் பெறவெறி பொருனைகால் பொருப்பன்
சொன்ன வாய்மைகேட் டகங்களி தூங்கினர் தொழுது
மின்னு வார்சடை முனிவரோர் வினாவுரை செய்வார்.

     (இ - ள்.) இன்னவாறு உமை அவதரித்து இருந்தனன் என்னா -
இவ்வாறு உமையம்மையார் திருவவதாரஞ் செய்திருந்தனரென்று, பொன்
அவாவினர்பெற எறிபொருனை கால் பொருப்பன் - பொன்னை
விரும்பினவர்கள் பெறுமாறு வீசுகின்ற தாமிரபன்னி நதியைப் பெற்ற
பொதியின் மலையையுடைய குறுமுனிவன், சொன்ன வாய்மை கேட்டு -
கூறிய உண்மையைக் கேட்டு, மின்னுவார் சடை முனிவர் - மின்னலைப்
போன்ற நீண்ட சடையையுடைய முனிவர்கள், அகங்களி தூங்கினர் - மனங்
களிப்புற்றவராய், தொழுது ஓர் வினாவுரை செய்வார் - வணங்கி ஒரு
வினாவுரை நிகழ்த்துவார்கள் எ - று.

     அவாவினர் பெறப் பொன்னை யெறியும் பொருனை என்னும்
அடையானது அந்நாட்டினர் விரும்பினோர்க்குப் பொன் வழங்கும்
வண்மையர் என்னுங் கருத்தினைக் கொண்டிருக்கிறது. வாய்மை -
வாய்மொழி; உண்மை. மின்னு, உ : சாரியை. (62)

திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் கரிதாய்
இருந்த நாயகி யாவையு மீன்றவெம் பிராட்டி
விரிந்த வன்புகூர் தக்கனும் வெற்பனும் பன்னாள்
வருந்தி நோற்றலா லவர்க்கொரு மதலையாய் வந்தாள்.

     (இ - ள்.) திருந்தும் நான்மறை சென்னியும் தீண்டுதற்கு அரிதாய்
இருந்த நாயகி - திருத்தமாகிய நான்கு மறைகளின் முடிவுந் தொடுதற்கு
அருமையாய் இருந்த இறைவியாகி, யாவையும் ஈன்ற எம்பிராட்டி -
அனைத்தையும் பெற்ற எம் பிராட்டியார், விரிந்த அன்புகூர் தக்கனும்
வெற்பனும் - அளவில்லாத அன்பு மிகுந்த தக்கனும் மலையரசனும், பன்னாள்
வருந்தி நோற்றலால் - பல நாட்கள் வருந்தித் தவஞ்செய்தலால், அவர்க்கு
ஒரு மதலையாய் வந்தாள் - அவர்களுக்கு ஒரு மகவாய்த் தோன்றியருளினார்
எ - று.

     சென்னியும் - சென்னியாலும். அரிதென்பது அருமை யென்னும் பண்பு
மாத்திரையாய் நின்றது. (63)