I


திருமணப் படலம்365



(அவை), பொய்யில் படுநெஞ்சு உடையார் தவம்போல மாய - பொய்யிற்
றலைப்பட்ட உள்ளத்தை யுடையவர்கள் செய்யும் தவம் அழிவதுபோல
அழிய, வீரக் கன்னி - வீரத்தையுடைய கன்னியாகிய தடாதகைப்
பிராட்டியார், நெய்யில் படு வச்சிரபேலை நிமிர்த்து வீசி - நெய் பூசிய
வச்சிரப்படையை ஓங்கி வீசி எ - று.

     கற்களே படையாக, தொட்டு என்பது ஈண்டு எடுத்து என்னும்
பொருளது. படுகென்று, அகரம் தொக்கது. பொய்யொன்றுடைய ராயின்
அவர் செய்யுந் தவமெல்லாம் பொன்றக்கெடு மென்றார். (37)

துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
அண்டங்கள் சராசரம் யாவையும் தாமே யாக்கிக்
கொண்டெங்கு நின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ.

     (இ - ள்.) துண்டம் பட துணித்து - துண்டு துண்டாக (அவற்றைத்)
துணித்து, அ கணவிரர்த தம்மைத் தண்டம் கொடு தாக்கினன் - அந்தக்
கணவீரர்களைத் தண்டப்படையா லடித்தார்; அவர் சாம்பிச் சாய்ந்துபோனார்
- அவர்கள் வலியிழந்து புறங்கொடுத்து ஓடினர்; அண்டங்கள் சராசரம்
யாவையும் - அண்டங்களையும் (அவற்றிலுள்ள) சராசரங்கள் அனைத்தையும்,
தாமே ஆக்கிக் கொண்டு - தாமே தோற்றுவித்து, எங்கும் நின்றாள் வலி -
அவை யெல்லாவற்றுள்ளும் கலந்து நின்ற பராசத்தியினது வலிமை, கூற
வரம்புற்று ஆமோ - கூறுதற்கு ஓரளவினை உடையதாகுமோ (ஆகாது) எ-று.

     சாய்ந்து - சரிந்து; புறங்கொடுத்து. சாம்பி - கூம்பி; சோர்வுற்று.
கொண்டு : இசை நிறைக்க வந்தது; உடைமையாகக்கொண்டு என்றுமாம். கூற
- கூறின், ஓகாரம் : எதிர்மறை. (38)

படையற்று விமானமும்* பற்றற வற்றுச் சுற்றுந்
தொடையற் றிகன்மூண் டெழுதோள்வலி யற்றுச் செற்றம்
இடையற்று வீர நகையற்றடலேறு போலும்
நடையற் றடைவார் நிலைகண்டன னந்தி யண்ணல்.

     (இ - ள்.) படை அற்று - படைக்கலங்கள் அழிந்தும், விமானமும்
பற்று அற அற்று - ஊர்திகளும் சிறிதுமின்றி அழிந்தும், சுற்றும் தொடை
அற்று - அணிந்த மாலைகள் அழிந்தும். இகல் மூண்டு எழு தோள்வலி
அற்று - போரின்கண் மிக்கெழுகின்ற தோள்வலி அழிந்தும், சேற்றம் இடை
அற்று - சினம் இடையில் அழிந்தும், வீரநகை அற்று - வீரச் சிரிப்பு
அழிந்தும், அடல் ஏறு போலும் நடை அற்று - வலிமை பொருந்திய ஆண்
சிங்கம் போலும் நடை அழிந்தும், அடைவார் நிலை - வருகின்ற வீரர்களின்
நிலைமையை, நந்தி அண்ணல் கண்டனன் - திரு நந்தி தேவர்
பார்த்தருளினார் எ - று.

     விமானமும் : உம்மை உயர்வு சிறப்பு. பற்றற - ஒழிவில்லையாக;
முழுதும். செற்றம் அவர்கட்டு இயற்கை யென்பார் ‘இடையற்று; என்றார்.
பெருமித முடையானுக்கு ஏறு நடையாலுவமம்;


     (பா - ம்.) * படையற்றபிமானமும்.