I


374திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பந்தர் - போலி. நாற்றுவார் : நால் என்பதன் பிற வினையாகிய நாற்று பகுதி.
ஆவணம் - ஈண்டு அரதன வாணிகம் புரியும் கடைத்தெரு. அரதனம் -
இரத்தினம். பொதுப்பெயர். ஆரம் - முத்து; கோப்பமை என்றமையால்
முத்துமாலை யென்றாயிற்று. (53)

அடுகரி சிந்துர மப்புவா ரழன்மணி யோடை மிலைச்சுவார்
கடுநடை யிவுளி கழுத்தணி காலணி கலனை திருத்துவார்
சுடர்விடு தேர்பரி பூட்டுவார் தொடையொடு கவரிக டூக்குவார்
வடுவறு பொற்கல நவமணி மங்கல தீப மியற்றுவார்.

     (இ - ள்.) அடுரி சிந்துரம் அப்புவார் - கொல்லுதலையுடைய
யானைகளின் (நெற்றியில்) சிந்தூரத் திலகம் சாத்துவார்கள்; அழல் மணி
ஓடை மிலைச்சுவார் - நெருப்புப்போலும் மணிகள் பதித்த பட்டத்தைச்
சூட்டுவார்கள்; கடு நடை இவுளி - விரைந்த செலவினை யுடைய
குதிரைகளின், கழுத்து அணி கால் அணிகலனை திருத்துவார் -
கழுத்திலணியும் அணிகளையும் காலில் அணியும் அணிகளையும்
சேணத்தையும் (அவைகட்குத்) திருத்தமுற அணிவார்கள்; சுடர்விடு தேர்
பரி பூட்டுவார் - சுடர்வீசம் தேர்களிற் குதிரைகளைப் பூட்டுவார்கள்;
தொடையொடு கவரிகள் தூக்குவார் - மாலைகளையும் சாமரைகளையும்
(அத்தேர்களிற்) கட்டித் தொங்க விடுவார்கள்; வடு அறு பொன்கலம் -
குற்றமற்ற பொன்னாலாகிய தட்டங்களில், நவமணி மங்கல தீபம் இயற்றுவார்
- நவரத்தினங்களாலாகிய மங்கல விளக்குகளை வைப்பார்கள் எ - று.

     அழல்மணி - மாணிக்கம். ஒடை - யானை நெற்றியிலணியும் பட்டம்.
(54)

பழையன கலனை வெறுப்பராற் புதியன பணிகள் பரிப்பராற்
குழைபனி நீரளை குங்கமங் குவிமலை புதைபட மெழுகுவார்
மெழுகிய வீரம் புலர்த்துவார் விரைபடு கலவைக ளப்புவார்
அழகிய கண்ணடி நோக்குவார் மைந்தரை யாகுல மாக்குவார்.

     (இ - ள்.) பழையன கலனை வெறுப்பர் - (பெண்கள்) பழைய
அணிகளை வெறுத்துக் களைவார்கள்; புதியன பணிகள் பரிப்பர் -
புதியனவாகிய அணிகளைத் தரிப்பார்கள்; குழை பனிநீர் அனை குங்குமம் -
குழைத்த பனிநீர் அளாவிய குங்குமக் குழம்பை, குவிமலை புதைபட
மெழுகுவார் - குவிந்த முலைகள் மறையுமாறு அப்புவார்கள்; மெழுகிய ஈரம்
புலர்த்துவார் - (அவ்வாறு) மெழுகிய ஈரத்தை (அகிற் புகையால்)
புலரவைப்பார்கள்; விரைபடு கலவைகள் அப்புவார் - மணம் பொருந்திய
கலவைகளைப் பூசுவார்கள்; அழகிய கண்ணடி நோக்குவார் - அழகிய
கண்ணாடியைப் பார்ப்பார்கள்; மைந்தரை ஆகுலம் ஆக்குவார் - இவற்றால்
ஆடவரை வருத்துவார்கள் எ - று.

     பழையன, புரியன பெயரெச்சங்கள். பழைய கலன் - முன் அணிந்தவை.
பனிநீர் அளைந்து குழைத்த குங்குமம் என்பது கருத்தாகக் கொள்க. மைந்தர்
என்னும் பொதுப்பெயர் ஈண்டுச் சிறப்பாக நாயகரை யுணர்த்தும் :
நாயகர்க்குச் சிறப்புப் பெயருமாம்; ஆகுல மாக்கல் - வேட்கை நோயால்
மெலியச் செய்தல். வெறுப்பர், மெழுகுவார், அப்புவார் என்பவற்றை
வினையெச்சமாக்கலுமாம். ஆல் இரண்டும் அசை. (55)