பாம்புகளுக்குத் தலைமைபூண்ட
அனந்தனாகிய அணியைத் தரித்த, சுந்தர
நாயகன் - சோமசுந்தரக் கடவுள், ஞாட்பு இகந்து இரசிதகிரி எய்தி -
போர்க்களத்தினீங்கி வெள்ளியங்கிரியை அடைந்து, போக நாயகனாகி
உயிர்க்கு எல்லாம் போகம்புரி புணர்ப்பு - போக நாயகனாகி
உயிர்களுக்கெல்லாம் போகத்தை அருளவிரும்புகின்ற திருக்குறிப்பை, அருள்
நந்தி அறிந்து - கருணையையுடைய நந்தி யெம் பெருமான் உணர்ந்து, மாக
நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல் மனம் வைத்தான் -
வானுலகிற் கிறையாகிய இந்திரன் திருமால் பிரமன் உருத்திரர்கள் ஆகிய
இவர்களின் வருகையைக் கருதி எ - று.
போக
நாயகன் - போகத்தை யளிக்கு நாயகன்; இறைவன் உமையோடு
கூடியே உயிர்களுக்குப் போக மளித்தலை,
"பெண்பா லுகந்திலனேற்
பேதா யிருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ" |
என்னும் திருவாசகத்தானும்.
"கண்ணுத லியோகி ருப்பக்
காமனின் றிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மாறான்
எண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்" |
என்னும் சிவஞான
சித்தியாராயினும் அறிக. புணர்ப்பு - சூழ்ச்சி, குறிப்பு. (79)
சங்கு கன்னனை யாதிய சணாதிகர் தமைவிடுத் தனனன்னார்
செங்க ணேற்றவர் மாலயன் முதற்பெருந் தேவர்வான் பதமெய்தி
எங்க ணாயகன் திருமணச் சோபன மியம்பினா ரதுகேட்டுப்
பொங்கு கின்றபே ரன்புபின் தள்ளுறப் பொள்ளென வருகின்றார். |
(இ
- ள்.) சங்கு கன்னனை ஆதி கணாதிபர் தமை விடுத்தனன் -
சங்கு கன்னனை முதலாகவுடைய கணத்தலைவர்களை விடுத்தான்; அன்னார்
- அவர்கள், செங்கண் ஏற்றவர் - சிவந்த கண்களையுடைய உருத்திரரும்,
மால் அயன் முதல் - திருமாலும் பிரமனும் முதலாகிய, பெருந்தேவர் வான்
பதம் எய்தி - பெரிய தேவர்களின் உயர்ந்த உலகங்களை அடைந்து, எங்கள்
நாயகன் திருமணச் சோபனம் இயம்பினார் - எங்கள் தலைவனாகிய
சிவபெருமானது திருமணத் திருவிழாவைக் கூறினார்கள், அதுகேட்டு -
அச்செய்தியைக் கேட்டு, பொங்குகின்ற - மேலெழுகின்ற, பேர் அன்பு
பின்தள்ளுற - பெரிய அன்பானது பின்னின்று தள்ள, பொள்ளென
வருகின்றார் - விரைந்து வருகின்றார்கள் எ - று.
கன்னனை
யென்பதில் ஐகாரம் சாரியையுமாம். ஏற்றவர் -
பொருந்தியவர்; இடபத்தினையுடையரென்னலுமாம். பொள்ளென; விரைவுக்
குறிப்பு. (80)
அஞ்சு கோடியோ சனைபுகைந் திருமடங் கழன்றவர் தமைப்போலீ
ரஞ்சு தீயுருத் திரர்புடை யுடுத்தவ ரழற்கணாற் பூதங்கள்
அஞ்சு நூறுருத் திரரண்டத் துச்சிய ரரியயன் முதற்றேவர்
அஞ்சு மாணையு மாற்றலும் படைத்தவ ரடுகுறட் படைவீரர். |
|