I


திருமணப் படலம்409



பரிதி யாயிரம் பணாடவி யுரகரும்
     பன்மணி விளக்கேந்தச்
சுருதி நாயகன் றிருவடி முடியின்மேற்
     சுமந்துபின் புறஞ்செல்ல.

     (இ - ள்.) நிருதி ஆடி கொண்டு எதிர்வர - நிருதியானவன்
கண்ணாடியையேந்தி எதிரே வரவும், அளகைக் கொன் கருதி - அளகைக்
கிறையாகிய குபேரன் திருமணச் சிறப்பை எண்ணி, அடிக்கடி ஆயிரம் நிதி
முகந்து சிதறிட - அடிக்கடி அளவிறந்த பொருளை மொண்டு வீசவும், தண்டி
- தண்டத்தையுடைய கூற்றுவன், நல் காஞ்சுகர் வினை செய்ய - நல்ல
கஞ்சுகமாக்கள் செய்தல் போல நெருக்கத்தை விலக்கி வரவும், பரிதி ஆயிரம்
பணாடவி உரகரும் - சூரியனைப் போல் விளங்கும் ஆயிரம்
பணாடவியையுடைய சேடனும், பல்மணி விளக்கு ஏந்த - பல மாணிக்க
விளக்குகளை ஏந்தி வரவும், சுருதி - வேதபுருடன், நாயகன் திருவடி -
இறைவன் திருவடியை, முடியின் மேல் சுமந்து பின்புறம் செல்ல - தன்
முடியின் மேல் தாங்கிப் பின்புறத்தே வரவும் எ - று.

     காஞ்சுகர் - கஞ்சுகர் : விகாரம்; சட்டையிட்டவர். பணாடவி - பண
அடவி : தீர்க்கசந்தி; படத்தின் காடு என்பது பொருள். உரகர், பொதுவுமாம்.
சுருதி - வேதம், வேதபுருடன். (108)

கங்கை காவிரி யாதிய நவநதிக்
     கன்னியர் குளிர்தூங்கப்
பொங்கு வார்திரைக் கொழுந்தெனக் கவரிகள்
     புரட்டவெண் பிறைக்கீற்றுத்
துங்க வாளெயிற் றிருளுடற் குழிவிழிச்
     சுடரழற் செம்பங்கிச்
சங்க வார்குழைக் குறியகுண் டோதரன்
     றண்மதிக் குடைதாங்க.

     (இ - ள்.) கங்கை காவிரி ஆகிய நவநதிக் கன்னியர் - கங்கை காவிரி
முதலிய ஒன்பது தீர்த்தங்களாகிய மகளிரும், குளிர் தூங்க - குளிர்ச்சி மிக,
பொங்குவார் திரைக் கொழுந்து என - மேலெழுகின்ற நீண்ட அலைக்
கொழுந்து போல, கவரிகள் புரட்ட - சாமரைகளைப் புரட்டி வீசவும்,
வெண்பிறைக் கீற்று துங்க வாள் எயிற்று - வெள்ளிய பிறையின் கீற்றைப்
போன்ற உயர்ந்த ஒளி பொருந்திய பற்களையும், இருள் உடல் - கரிய
உடலையும், கழி விழி - குழிந்த கண்களையும், சுடர் அழல் செம்பங்கி -
எரியும் தீப்போன்ற சிவந்த மயிரையும், சங்கவார் குழை - சங்காலாகிய
நீண்ட குழைகளையுமுடைய, குறிய குண்டோதரன் - குறிய வடிவமுள்ள
குண்டோதரன், தண்மதிக் குடை தாங்க - குளிர்ந்த சந்திர வட்டக்
குடையினைத் தாங்கி வரவும் எ - று.

     நவநதி முன் உரைத்தாம்; ஆண்டுக் காண்க. பிறையாகிய கீற்றென்க.
பங்கி - மயிர். (109)