I


410திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இடிக்கும் வானுரு மேறுயர் நெடுங்கொடி
     யெகினவெண் கொடிஞாலம்
முடிக்கு மூழிநா ளுளர்கடுங் காலென
     மூச்செறி விடநாகந்
துடிக்க வாய்விடு* முவணவண் கொடிமுதற்
     சூழ்ந்துசே வகஞ்செய்யுங்
கொடிக்கு ழாத்தினுட் கொடியர சாய்விடைக்
     கொடிபுடை பெயர்ந்தாட.

     (இ - ள்.) குழ்ந்து சேவகம் செய்யும் - சூழ்ந்து சேவகம் செய்கின்ற,
வான் இடிக்கும் உரும் ஏறு உயர் நெடுங்கொடி - வானின்கண் இடிக்கின்ற
இடியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும், வெள் எகினக் கொடி - வெள்ளிய
அன்னக் கொடியும், ஞாலம் முடிக்கும் ஊழி நாள் - உலகத்தை அழிக்கும்
ஊழிக்காலத்தில், ஊளர் சுடுங்கால் என - வீசுகின்ற சண்டமாருதத்தைப்
போல, மூச்சு எறி விடநாகம் - மூச்சு விடுகின்ற நஞ்சினையுடைய பாம்புகள்,
துடிக்க வாய்விடும் - துடிக்குமாறு ஆர்க்கின்ற, வள் உவணக் கொடி முதல்
கொடிக் குழாத்தினுள் - வளப்பத்தினையுடைய கலுழக் கொடியும் முதலாகிய
கொடிக் கூட்டங்களுள், விடைக் கொடி - இடபக் கொடியானது, கொடி
அரசாய் - கொடிகளுக்கரசாய், புடை பெயர்ந்து ஆட - அசைந்தாடவும்
எ-று.

     உயர் நெடும் : ஒரு பொருட் சொற்கள். எகினம், அம் : சாரியை.
இடியேறு இந்திரனுக்கும், அன்னம் பிரமனுக்கும், உவணம் திருமாலுக்கும்
கொடிகளாதலின் அவற்றையெடுத்தோதினார். 'நாகந் துடிக்க வாய்விடும்
உவணவண் கொடி' என்னுங் கருத்தினை,

"கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும்"

என்னும் திருமுருகாற்றுப்படையினுங் காண்க. (110)

கண்ணு தற்பிரான் மருங்கிரு கடவுளர்
     கப்புவிட் டெனத்தோன்றும்
வண்ண முத்தலைப் படையெடுத் தொருகுட
     வயிறுடைப் பெரும்பூதம்
பண்ண வப்பதி னெண்படைக் கலமுந்தன்*
     பக்கமாச் சேவிப்ப
அண்ணன் முச்சுடர் முளைத்தொரு வரைநடந்
     தனையதோர் மருங்கெய்த.

     (இ - ள்.) நுதல் கண் பிரான் - நெற்றியிற் கண்ணையுடைய
இறைவனின், மருங்கு - இரண்டு பக்கங்களிலும், இரு கடவுளர் கப்பு


     (பா - ம்.) * வாயிடு.