போலத் தோன்றியருளிய
சுந்தரப் பெருமான், சாத்தும் நீறொடு திருமாலையும்
எடுத்து ஏந்த - அணியுந் திருநீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி
வரவும் எ - று.
பந்தம்
- தளை; இசைக்கட்டு. சுந்தரன் - சிவபெருமான் ஒரு கால்
கண்ணாடியிற் பிரதிவிம்பித்த தமது நிழலை வாவென்றருள வந்தவர்;
திருக்கைலையில் சிவபெருமானுக்குத் திருநீறும் திருப்பள்ளித் தாமமும்
எடுத்தேந்தும் அணுக்கத் தொண்டராயுள்ளவர். பாற்கடல் கடைந்த
பொழுதுண்டாகிய ஆலால விடத்தைச் சிவபெருமான் பணித்தபடி கொண்டு
வந்து ஆலால சுந்தரர் எனப் பெயர் பெற்றவர்; இவரே சைவ சமய
குரவராகிய நம்பியாரூரராகவும் பிறந்தனர்;
"அருளி
னீர்மைத் திருத்தொண் டறிவரும்
தெருளி னீரிது செப்புதற் காமெனில்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளி னாகு மெனப்புகல் வாமன்றே" |
என்னும் பெரியபுராணச்
செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (112)
அன்னத் தேரின
னயன்வலப் பாங்கரு
மராவலி கவர்சேன
வன்னத் தேரினன் மாலிடப் பாங்கரு
மலர்க்கரங் குவித்தேத்தப்
பொன்னத் தேமலர்க் கொன்றையான் வெள்ளியம்
பொருப்பொடு மெழீஇப்போந்தால்
என்னத் தேரணி மதுரைமா நகர்ப்புறத்
தெய்துவா னவ்வேலை. |
(இ
- ள்.) அன்னத்தேரினன் அயன்வலப் பாங்கரும் - அன்னமாகிய
தேரையுடைய பிரமன் வலப் பக்கத்தினும், அரா வலி கவர் சேன வன்னத்
தேரினன் மால் - பாம்பின் வலியைக் கொள்ளை கொள்ளும் கலுழனாகிய அழகிய தேரையுடைய
திருமால், இடப் பாங்கரும் - இடப்பக்கத்திலும்,
மலர்க் கரம் குவித்து ஏத்த - தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பிப்
பரவவும், பொன் அம் தேம் மலர்க் கொன்றையான் - பொன் போன்ற
அழகிய தேனையுடைய கொன்றை மலர் மாலையையுடைய சிவபெருமான்,
வெள்ளியம் பொருப்பொடும் எழீஇப் போந்தால் என்ன -
வெள்ளியங்கிரியோடும் எழுந்து வந்தாற் போல (இடபத்தின் மேல்
எழுந்தருளி), தேர் அணி மா மதுரை நகர்ப் புறத்து எய்துவான் -
நிலைத்தேரின் வரிசையையுடைய பெரிய மதுரைப் பதியின் புறத்தே
வருகின்றான்; அது போது எ - று.
ஊர்தியுட்
சிறந்தன தேரும் புரவியும் யானையுமாதலின்
ஏனையவற்றையும் அப்பெயர்களோடு சார்த்திக் கூறு முறைமை பற்றி
அன்னத்தேர் சேனத்தேர் என்றார். தேரினன் இரண்டும் எச்சம்.
பொன்னத்தே மலர் : எதுகை நோக்கி வலித்தது. ந எனப் பிரித்துச்
சிறந்த வென்றுரைப்பாரு முளர். (113)
|